ராமநவமி விழா - கும்பகோணம் ராமசாமி கோவிலில் கொடியேற்றம்..!!
flag hoisting in kumbakonam ramaswami temple for ramanavami function
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் அமைந்துள்ளது. 'தென்னக அயோத்தி' என்று அழைக்கப்படும் இந்தக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேய சுவாமிகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
அதன் பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சுவாமிகளுக்கும், கொடிமரத்திற்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்தத் திருவிழா விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறுகிறது.
இந்த ராமநவமி நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான 4-ம் நாளன்று இரவு ஓலை சப்பரத்தில் கருட சேவையும், 7-ம் நாளன்று இரவு கோரதம் புறப்பாடும், அடுத்த மாதம் 6-ந் தேதி காலை தேரோட்டமும், இரவு கோவில் வளகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
English Summary
flag hoisting in kumbakonam ramaswami temple for ramanavami function