கடும் பனி மூட்டம் - சென்னையில் விமான சேவை பாதிப்பு.!
flight service affected in heavy snow fall
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் முழுவதும் பனி மூட்டத்தால் சூழ்ந்து காணப்பட்டது.
இந்தப் பனி மூட்டத்தால் சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். அதுமட்டுமல்லாமல், செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் பத்து நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன.
ரெயில் தாமதத்தால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதற்கிடையே, சென்னையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கடுமையான பனிமூட்டத்தின் காரணமாக, ஆறு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
English Summary
flight service affected in heavy snow fall