கோவை பில்லூர் அணையில் நீர் திறப்பு - பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு..!!
Flood in Bavani River Due to Water Opening in Pillur Dam
கோவை மேட்டுப் பாளையம் அருகே அமைந்துள்ளது பில்லூர் அணை. இது 100 அடி கொள்ளளவு கொண்ட அணையாகும். இந்த அணையின் முக்கிய நீர் ஆதாரமாக நீலகிரி மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீர் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நீலகிரியில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் நேற்று நள்ளிரவு பில்லூர் அணையில் நீர் வரத்து அதிகரித்ததையடுத்து, இன்று அதிகாலை அணையில் இருந்து நான்கு மதகுகள் வழியாக நீர் திறந்து விடப் பட்டுள்ளது. கிட்டத் தட்ட ஓராண்டுக்கு பிறகு இந்த அணையில் இருந்து நீர் திறக்கப் படுவது குறிப்பிடத் தக்கது.
அந்த வகையில் இன்று அதிகாலை 5 மணிக்கு 9000 கன அடி நீரும், இதையடுத்து அணையின் நீர் வரத்து அதிகரித்ததால் காலை 5.30 மணிக்கு 12 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப் பட்டது. இதையடுத்து பில்லூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப் பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ செல்லக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மேட்டுப் பாளையம் தாசில்தார் சந்திரன் தலைமையில் பவானி ஆற்றின் கரையோர மக்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
English Summary
Flood in Bavani River Due to Water Opening in Pillur Dam