குவியல் குவியலாக.. ரவுண்டு கட்டிய அதிகாரிகள்.!! தடை செய்யப்பட்ட 100 கிலோ பொருட்கள் பறிமுதல்.!!
Food Safety officials seized banned Gutka products in Chennai
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படும் குட்கா பொருட்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது.
தமிழக காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க இயலாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்களை முறையாக சோதனை செய்யப்படாததால் கஞ்சா, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் எளிதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றடைகிறது.
இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறிய கடைகளில் குட்கா பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருந்தது. அந்தப் புகார்களின் அடிப்படையில் இன்று சென்னையில் அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை, வில்லிவாக்கம், கோயம்பேடு, வடபழனி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட சுமார் 100 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தடையை மீறி குட்கா பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு ₹80,000 வரை அபராதம் விதித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடையின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Food Safety officials seized banned Gutka products in Chennai