73 வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.. த.மா.கா தலைவர் ஜிகே வாசன்.!!
gk vasan wish for republic day
73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
இந்தியக் குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது சிறப்புக்குரியது. நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட, உயிர்த்தியாகம் செய்த தேசிய தலைவர்களை நினைவு கூறும் விதமாக குடியரசுத் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் நாடு முழுவதும் 73 வது குடியரசுத் தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசு என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியில் மக்களையும், சுதந்திரத்தையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்பது தான்.
அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளான குடியரசு தினத்தை கொண்டாடுகின்ற மத்திய மாநில அரசுகள் அந்த சட்டத்தை முறையாக முழுமையாக சரியாக கடைப்பிடிக்க வேண்டும். நாட்டு மக்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
அதாவது நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும், நாட்டு மக்களுக்கான பாதுகாப்பும், நாட்டின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தேசிய தலைவர்களை நினைவு கூர்ந்து அவர்களின் தியாகத்தை மனதில் வைத்து, அவர்களுக்கு மரியாதை செய்வதோடு, அவர்கள் பெற்றுத்தந்த சுதந்திர நாட்டை பாதுகாக்க வேண்டியது இந்திய நாட்டின் ஒவ்வொருவரது தலையாய கடமையாகும்.
நம் நாட்டு மக்களும் கொரோனா, ஓமிக்ரான் ஆகிய தொற்று நோயால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். குடியரசு தினத்தை கொண்டாடும் நாட்டு மக்கள் நோய் தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக, சரியாக கடைப்பிடித்து அனைவரின் பாதுகாப்பிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டும்.
இந்த குடியரசு தினம் கொரோனா உள்ளிட்ட பல தொற்று நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நல்ல சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று நம்புவோம்.
73 வது குடியரசு தினம் இந்தியர் ஒவ்வொருவருக்கும் முன்னேற்றத்தையும், பாதுகாப்பான வாழ்க்கையையும் அமைத்துக்கொடுக்க த.மா.கா சார்பில் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
English Summary
gk vasan wish for republic day