வெளிநாடு செல்வதால் முதலீடு வராது.. மு.க ஸ்டாலினை மறைமுகமாக சாடிய ஆர்.என் ரவி..!!
Governor RN Ravi indirectly attacked TN CM MKStalin
மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது இதில் சில அம்சங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கையை குறித்து ஆலோசனை செய்ய நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ் பவனில் இன்று அனைத்து துணைவேந்தர்கள் மாநாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆளுநர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதல் நாள் மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி "நாம் கேட்பதாலோ, நேரில் சென்று பேசுவதாலோ முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள். நாம் நேரில் சென்று அழைத்தால் பேரம் பேசுவார்கள். நம் நாட்டில் அவ்வாறு செய்யும் பல மாநிலங்கள் உள்ளன. இந்தியாவில் சிறிய மாநிலமான ஹரியானாவில் நம் மாநிலத்திற்கு இணையான முதலீடுகள் உள்ளன. உலக அளவில் முதலீடு ஈர்ப்பதற்கான சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும்.
அதற்கு நாம் திறமையான, பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த வாய்ப்பினை நாம் சரிவர பயன்படுத்திக் கொள்ள முடியும்" என துணைவேந்தர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசியுள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதலீடு ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று திரும்பி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இது போன்ற ஒரு கருத்தை துணைவேந்தர்கள் பங்கேற்கும் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என் ரவி என்று பேசி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த காலங்களில் தமிழக அரசு குறித்து ஆளுநர் ஆர்.என் ரவி பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருந்த நிலையில் தற்பொழுது முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்து இருப்பது விவாத பொருளாகியுள்ளது. ஆளுநரின் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்கு தமிழக அரசு எந்த மாதிரியான விளக்கத்தை அளிக்க உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே பல்வேறு சமயங்களில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஆளுநர் கருத்து கூறியதற்கு ஆளும் திமுக அரசு பதிலடி கொடுத்து வரும் நிலையில் தமிழக ஆளுநர் ரவி இன்று கூறிய கருத்து கூடிய விரைவில் ஆளும் திமுக அரசு தரப்பில் இருந்து எதிர்வினை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Governor RN Ravi indirectly attacked TN CM MKStalin