தறிகெட்டு ஓடிய சுற்றுலாப் பேருந்து குப்புற கவிழ்ந்து விபத்து: பயணிகளின் நிலை என்ன?
Hogenakkal tourist bus overturns accident
விழுப்புரத்தில் இருந்து ஒகேனக்கல் பகுதிக்கு சென்ற சுற்றுலா பேருந்து கணவாய் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 49 பேர் காயமடைந்துள்ளனர்.
விழுப்புரம், கண்டமங்கலம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர் ஓய்வு விழாவை கொண்டாடுவதற்காக அவருடன் பணியாற்றும் சக மருத்துவர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர்களின் குடும்பத்தினருடன் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா செல்வதற்கு முடிவெடுக்கப்பட்டது.
இதனை அடுத்து கடலூர் பகுதியைச் சேர்ந்த சாய்குமார் என்பவருக்கு சொந்தமான சுற்றுலா பேருந்தை வாடகைக்கு எடுத்து ஸ்ரீநாத் (வயது 22) என்பவர் ஒட்டி சென்றார்.
கடலூர், பாண்டி, விழுப்புரம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஸ்ரீநாத் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோரின் குடும்பத்தினர் மொத்தம் 56 பேரை ஏற்றுக்கொண்டு இன்று ஒகேனக்கல் பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது கணவாய் பகுதி ஆஞ்சநேயர் கோவில் அருகே சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்டு அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 49 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
English Summary
Hogenakkal tourist bus overturns accident