பெண்களை ஹோட்டலில் அடைத்து பாலியல் தொழில் - தலைமறைவாக இருந்த ஹோட்டல் அதிபர் கைது..!!
Hotel Owner Arrested in Chennai
துபாயில் நடன நிகழ்ச்சி என்று கூறி துணை நடிகைகள், இளம் பெண்களை அழைத்துச் சென்று நட்சத்திர ஹோட்டலில் அடைத்து வைத்து பாலியல் தொழில் செய்த ஹோட்டல் அதிபர் கைது செய்யப் பட்டுள்ளார்.
சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மிக வறுமையான குடும்ப பின்னணி கொண்ட மற்றும் வேலை தேடும் இளம் பெண்கள் மற்றும் சினிமாவில் வாய்ப்பு இல்லாத துணை நடிகைகளை துபாயில் உள்ள ஹோட்டலில் நடனமாடும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த ஒரு கும்பல் பல பெண்களை துபாய் அழைத்துச் சென்றுள்ளது.
இந்த கும்பலை நம்பிச் சென்ற 50 க்கும் மேற்பட்ட பெண்களை துபாயில் ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்து கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அந்த கும்பல் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 21 வயதுள்ள நடன கலைஞர் ஒருவர் இந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சென்னை காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் செந்தில் குமாரி, பாலியல் தடுப்பு பிரிவு உதவி ஆணையர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையிலான குழு வழக்குப் பதிந்து சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ், துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஆஃபியா, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோரை கடந்த மே மாதம் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த பாலியல் கும்பலின் தலைவராக இருந்த கேரளாவைச் சேர்ந்த முஸ்தபா புக்கங்கோட் (எ) ஷகீலை கேரளாவில் இருந்து துபாய் தப்பிச் செல்ல இருந்தபோது சென்னை போலீசார் அங்கு சென்று குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
English Summary
Hotel Owner Arrested in Chennai