சென்னையில் குவிக்கப்படும் 17000 போலீசார்!
kaanum pongal 2024 chennai police
காணும் பொங்கலையொட்டி, போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் சென்னையில் 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 1500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு 13 கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி 3 போலீசார் பைனாகுலரில் கண்காணிக்க உள்ளனர். அங்கிருந்தபடியே மெகாபோன் மூலமாக அவர்கள் தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள். தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக வாட்ஸ்அப் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையோரமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. குதிரைப்படையினருடன், கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய 3 வாகனங்கள் மூலமாகவும் ரோந்து சென்று குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
சென்னை போலீஸ் மற்றும் கடலோர காவல் குழுமத்தின் கடற்கரை உயிர்காக்கும் பிரிவின் 85 போலீசார் அடங்கிய தனிப்படையும் பொதுமக்கள் கடலில் இறங்காமல் இருப்பதற்காக கடலோர பகுதிகளில் கண்காணிக்க உள்ளனர்.
மெரினாவை போன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினாவை போன்று பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்டு அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகள் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களை நிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர் பெற்றோர் பெயர், முகவரி மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர்.
ஆகவே குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையங்களில் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மெரினா கடற்கரை மணல் பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது.
காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவு கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், மற்றும் திரை அரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
அனைத்து இடங்களிலும் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
காணும் பொங்கல் அன்று சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள்.
இதுமட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. ரோடு மற்றும் முக்கிய சாலைகளில் பைக்ரேஸ் தடுப்பு நடவடிக் கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை பெருநகர காவல் துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
(மேற்கண்ட இந்த செய்தி சென்னை காவல்துறையால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது)
English Summary
kaanum pongal 2024 chennai police