கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் விவகாரம்...உதவி பேராசிரியர் தலைமறைவு.!
Kalashethra college sexual harassment case assistant professor escape
சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து புகார் அளித்து கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டதால், சமூக வலைத்தளங்களில் மாணவிகள் தங்களின் குற்றச்சாட்டுகளை பதிவிட்டனர்.
இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு, காவல்துறை இதை உரிய முறையில் சரியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது இது தொடர்பாக கல்வி நிறுவனம் எல்லைக்குட்பட்ட அடையார் காவல் நிலையத்தில் கலாஸஷேத்ரா கல்வி நிறுவனம் குறித்து எந்த புகாரும் மாணவிகளிடம் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மாணவிகள் சம்மந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க தயங்குவதாக குற்றஞ்சாட்டி போராட்டத்தில் இறங்கினர்.போராட்டம் காரணமாக வரும் ஏப்ரல் 6 வரை கல்லூரி மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்தது. இருப்பினும் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ் குமரி தலைமையில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.எஸ் குமரி, "உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
பாலியல் புகார் குறித்து 12 மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளேன்.கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். பேராசிரியர் உட்பட 4 பேரின் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இதுசம்மந்தமான அறிக்கையை வரும் திங்கட்கிழமை அரசிடம் அளிக்க உள்ளேன்" என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி தெரிவித்தார்.
இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட உதவி பேராசிரியரை இன்று போலீசார் கைது செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தலைமறைவாகியுள்ளார். மேலும் ஜாமின் பெறுவதற்காக வழக்கறிஞர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Kalashethra college sexual harassment case assistant professor escape