கட்சிக்கு அவப்பெயர் - சிக்கலை தீர்க்க வேற வழி.. திமுக தலைமை எடுத்த முடிவு!
kanjipuram DMK Mayor issue
காஞ்சிபுரம் மேயர் ஆதரவாளர்கள் இருவரை திமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக, திமுகவின் தலைமை அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்க்கு எதிராக திமுக மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் என மொத்தம் 35 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று மாலை திமுகவின் தலைமை உத்தரவின் பேரில், திமுக அமைப்புச் செயலாளர், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சு வார்த்தையில், மேயரின் ஆதரவாளர்கள் காஞ்சிபுரம் மாநகர மாவட்ட பிரதிநிதி எஸ்.பி பிரகாஷ் மற்றும் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் கே.ஆர். டில்லி குமார் ஆகியோர் மீது எதிர்ப்பு கவுன்சிலர்கள் சரமாரி புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி சேர்ந்த மாவட்ட பிரதிநிதி எஸ்.வி. பிரகாஷ் மற்றும் மாவட்டக் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் கே.ஆர். டில்லி குமார் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும் அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருநெல்வேலி மற்றும் கோயமுத்தூர் மாநகராட்சி மேயர்கள் ராஜினாமா செய்து, அந்த மாநகராட்சிகளுக்கு மேயர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காஞ்சிபுரத்திலும் இந்த சர்ச்சை எழுந்துள்ளதால், இதனை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வரவே திமுக தலைமை முதலில் முடிவு செய்திருந்தது.
ஆனால் வேறு வழியே இல்லை என்ற நிலையில், தற்போது இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
English Summary
kanjipuram DMK Mayor issue