காரைக்கால் துறைமுக விவகாரம்..நாராயணசாமி வாய்மூடி மவுனம் காத்தது ஏன்? அதிமுக சரமாரி கேள்வி!
Karaikal Port Issue Why was Narayanasamy silent AIADMK Question
முதலமைச்சராக இருந்த நாராயணசாமி நினைத்திருந்தால் அதானி நிறுவனம் காரைக்கால் துறைமுகத்தை விலைக்கு வாங்க ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு காரைக்கால் துறைமுகத்தை அதானி நிறுவனம் விலைக்கு வாங்கும் முயற்சிக்கு எந்த தடையும் ஏற்படுத்தாமல் வாய்மூடி நாராயணசாமி மவுனம் காத்தது ஏன்? என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மீது அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.அப்போது பேசும்போது அவர் , கடந்த திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சராக நாராயணசாமி ஆண்ட ஆட்சி டெல்லி சுல்தான்களின் அடிமை ஆட்சி போல், அதில் தானும் அடிமையாக ஆட்சி புரிந்ததை மறந்துவிட்டு விரக்தியின் விளிம்பில் தற்போதைய ஆட்சியை, மத்திய அரசின் கைக்கூலி ஆட்சி என தன்னிலை உணராமல் விமர்சித்துள்ளார்.
தனது 5 ஆண்டுகால ஆட்சி காலத்தில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத திட்டத்தை எதிர்க்க துணிவில்லாமல் பல்வேறு திட்டங்களை புதுச்சேரியில் அமுல்படுத்தியவர் நாராயணசாமி ஆவார். உதாரணத்திற்கு உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய (EWS) நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வழங்க வேண்டும் என மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது. அதை தமிழகத்தில் அப்போது ஆட்சி செய்த மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் சமூக நீதிக்கு எதிரான இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என மறுத்தார். ஆனால் இந்தியாவில் டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களில் கூட இந்த திட்டத்தை அமுல்படுத்தாத போது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அஞ்சி நடுங்கி இந்த திட்டத்தை முதன் முதலில் அமுல்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆவார். அப்படிப்பட்ட மாவீரர் அவர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் திமுகவை சேர்ந்த நபரால் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டிக்க திராணியற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தை பற்றி பேசுகிறார். தமிழகத்தில் தமிழ் பெண்ணுக்கு நடைபெற்ற மகாபாதக கொடுமை பற்றி வாய் திறந்தால் தனது கூட்டணி கட்சியான திமுக கோபித்துக்கொள்ளும் என வாய் திறக்காமல் உள்ளார். ஆனால் தமிழக திமுக அரசை கண்டித்து எதிர்கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை குறை கூறுகிறார். திரு.நாராயணசாமியின் இதுபோன்ற தவறான செய்கையால், பெண் சமுதாயத்திற்கு எதிரான கட்சி காங்கிரஸ் என முன்னிலைப்படுத்துகிறார். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தமிழக திமுகவின் குற்றச்செயல்களை திசை திருப்பும் விதத்தில் தமிழக திமுக அரசுக்கு ஆதரவாக பேசுவதை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
புதுச்சேரி முதலமைச்சர் அறையில் 6 புரோக்கர்கள் இருப்பதாக இதுவரை 60 முறை திரு. நாராயணசாமி அவர்கள் கூறியள்ளார். ஆனால் அந்த 6 புரோக்கர்கள் யார் யார் என்பதை சொல்லும் தைரியம் நாராயணசாமிக்கு உண்டா? புதுச்சேரியை ஆளும் அரசு இதுவரை 2000 கோடிக்கு மேல் ஊழல் செய்ததாக அவ்வப்போது வெற்று விளம்பரத்திற்காக பேசும் நாராயணசாமியால் ஆதாரப்பூர்வமாக ஒரு குற்றச்சாட்டையாவது வெளியில் சொல்ல முடியுமா? தனக்கு தெரிந்த முறைகேட்டை கூட ஆதாரத்துடன் தைரியமாக எடுத்துக்கூற முடியாத திரு.நாராயணசாமி அவர்கள் இனி வரும் காலங்களில் வாய்மூடி மவுனம் காப்பது நல்லது.
கடந்த 5 ஆண்டுகால தனது ஆட்சியில் அரசு துறையில் ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பு வழங்காமல், மக்கள் நலனுக்காக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் மாநில வளர்ச்சியை குட்டிச்சுவராக்கி இருண்ட ஆட்சியை கொடுத்த நாராயணசாமிக்கு பிறர் ஆட்சியை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.
குறிப்பாக வடநாட்டில் தொழில் புரியும் அதானி நிறுவனத்தை தனது ஆட்சியின் போது காரைக்கால் துறைமுகத்தை அதானி நிறுவனம் விலைக்கு வாங்க முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் ஆட்சியின் போது பேச்சுவார்த்தை துவக்கப்பட்டதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள். நாராயணசாமி ஆட்சியின் போது துவக்கப்பட்ட காரைக்கால் துறைமுகம் விற்பனைக்காக பேசப்பட்ட பேச்சுவார்த்தை 2022-ல் நிறைவடைந்தது. 2022-ல் அந்த துறைமுகம் அதானி நிறுவனத்திற்கு கைமாற கடந்த கால காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த நாராயணசாமியே காரணம் என்பதை அவர் மறுப்பாரா?
முதலமைச்சராக இருந்த நாராயணசாமி நினைத்திருந்தால் அதானி நிறுவனம் காரைக்கால் துறைமுகத்தை விலைக்கு வாங்க ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு காரைக்கால் துறைமுகத்தை அதானி நிறுவனம் விலைக்கு வாங்கும் முயற்சிக்கு எந்த தடையும் ஏற்படுத்தாமல் வாய்மூடி நாராயணசாமி மவுனம் காத்தது ஏன்? அன்றைய நாராயணசாமியின் மவுனம் இன்றைக்கு லாபத்துடன் இயங்கும் மின்துறையை விலைக்கு வாங்கும் அளவிற்கு வந்திருக்கிறது என்றால் இந்த பாவ செயலை செய்தது யார்? இதற்கு நாராயணசாமி பதில் கூறுவாறா என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
English Summary
Karaikal Port Issue Why was Narayanasamy silent AIADMK Question