பெரும் சோகம்! கேரள நிலச்சரிவில் தமிழர் ஒருவரும் பலி! 100-யை நெருங்கும் பலி எண்ணிக்கை!
Kerala Wayanad Landslide
கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்னும் சொல்ல போனால் பேய் மழை பெய்து வருகிறது.
அதிலும், நேற்று கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, வயநாடு மாவட்டத்தில் நள்ளிரவு நேரத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
வயநாடு மாவட்டத்தின் மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு தற்போதுவரை 96 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1000 பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கிய 116 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேரளா மாநில சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வயநாட்டின் அண்டை மாவட்டங்களான மலப்புரம், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களிலும் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இந்நிலையில், கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி, நீலகிரி மாவட்டம், கூடலூர் சேர்ந்த கட்டட தொழிலாளி காளிதாஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.
வயநாடு பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து பணிபுரிந்த போது, புளியம்பாறை சேர்ந்த காளிதாஸ் மண் சரிவு மற்றும் காற்றாற்று வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.