மாணவிக்கு தீண்டாமை நடைபெறவில்லை - ஏஎஸ்பி சிருஷ்டி சிங் விளக்கம்!
Kovai School exams student
கோவையின் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு மாணவிக்கு நடந்த ஒரு கொடூரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5ம் தேதி, பூப்படைந்த அந்த மாணவி, முழு ஆண்டு தேர்வு எழுத வந்த போது வகுப்பறையில் அமர விடாமல் வெளியே உட்கார வைத்து தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்த காணொளி ஒன்றும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையில், பள்ளி முதல்வர் ஆனந்தி மற்றும் கண்காணிப்பாளர் சிவகாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏஎஸ்பி சிருஷ்டி சிங் தெரிவிக்கையில், "மாணவிக்கு தீண்டாமை நடைபெறவில்லை. தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி தனியே அமர வைக்க மாணவியின் தாய் கோரிக்கை விடுத்தது தொடர்ந்து அவரை தனியாக அமர வைத்துள்ளனர்" என்று விளக்கமளித்தார்.
இதற்கிடையே, மாணவியின் தாய், 'தனது மகளை தனியாக அமர வைக்க கூறினேனே தவிர, வெளியே தரையில் அமர வைக்க கூறவில்லை' என கூறியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க கல்வித்துறை அதிகாரிகளும் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உதவி இயக்குநர் வடிவேல் தலைமையில் மாணவியிடமும், பள்ளியிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு உறுதியானால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் உறுதி அளித்துள்ளார்.
English Summary
Kovai School exams student