மீண்டும் மூடப்பட்டது மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் நடை - காரணம் என்ன?
melpathi thiravupathi amman temple gate close
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 7.4.2023 அன்று தீமிதி திருவிழாநடைபெற்றது. இந்தத் திருவிழாவில் ஒரு தரப்பினர் வழிபடுவதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததனால், இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த 7.6.2023 அன்று கோவில் தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றம் உத்தரவின் படி 9 மாதங்களுக்குப்பிறகு கோவில் கதவு திறக்கப்பட்டு பக்தர்கள் யாரும் இன்றி ஒருகால பூஜை மட்டும் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கோவிலுக்குள் அனைத்து தரப்பு மக்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்றும், அவர்களை தடுத்தால் தடுப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அனைத்து தரப்பு மக்களின் வழிபாட்டுக்காக நேற்று அதிகாலை 5.35 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. மேலும், பாதுகாப்புக்காக 800 போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டது. அதன்படி காலை 6.20 மணியளவில் பக்தர்கள், கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் செல்போன்கள், கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
அப்போது ஒரு தரப்பினரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அவர்களை சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வராததால் கோவில் நடை மூடப்பட்டது. நேற்று பட்டியலின மக்கள் சென்று அம்மனை வழிபட்ட நிலையில், இன்று மற்றொரு சமூகத்தினர் கோவிலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
melpathi thiravupathi amman temple gate close