தமிழகத்தை உலுக்கிய கள்ளச்சாராய பலி 23 ஆக உயர்வு..!!
Liquor death toll rises to 23 in TamilNadu
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது. மேலும் கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அதே போன்று செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே பேரப்பாக்கத்தில் போலி மதுபானம் அருந்திய 8 பேர் தற்போது வரை உயிரிழந்த நிலையில் பலர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 15 பேருக்கு கண்பார்வை, சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை முறைகள் 2 முறை அளிக்கப்பட்டும் உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் மரக்காணம் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. மரக்காணம் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
English Summary
Liquor death toll rises to 23 in TamilNadu