காவிரி நீர் வழக்கு எங்களுக்கும் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல தெரியும் - அமைச்சர் துரைமுருகன்.!
minkster duraimurgan speech about cauvery water issue
தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தினமும் ஒரு டி.எம்.சி. காவிரி நீரை இருபது நாட்களுக்கு திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் சித்தராமையா, "கர்நாடகத்தில் இந்த முறை இயல்பான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதுவரை அணைகளில் 28 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு பற்றாக்குறையாக உள்ளது. தற்போது காவிரி அணைகளில் 60 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இது எங்களுடைய விவசாய பணிகளுக்கு தேவைப்படுகிறது. அதனால் இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது. இந்த உத்தரவை எதிா்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
கர்நாடக அரசின் இந்த முடிவு தமிழக விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் காவிரிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செய்தியாளர்களிடம் பேசினார். அதாவது:-
"காவிரியில் தினமும் ஒரு டி.எம்.சி. நீர் இந்த மாதம் இறுதி வரை வழங்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இந்த ஒழுங்காற்று குழு என்பது தமிழ்நாடு குழு அல்ல. தமிழகம், கர்நாடகம் என இரண்டு மாநிலத்திற்கும் பொதுவான குழு. இது உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு.
இந்த குழு கர்நாடக அணைகளில் உள்ள மொத்த நீர் இருப்பை கணக்கெடுத்து கர்நாடகத்தின் தேவைக்கு போக தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி. வீதம் தண்ணீர் வழங்க உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கர்நாடக அரசு சொல்வது சிறுபிள்ளைகள் அழுகுணி ஆட்டம் ஆடுவதுபோல் இருக்கிறது. இதே ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டுக்கு கூட பாதகமாக பலமுறை கருத்து சொல்லி இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தால், உருவாக்கப்பட்ட ஒழுங்காற்று குழுவின் உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சொல்வது உச்சநீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து சொல்வது போன்றதாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு சொல்வது அரசியல் சட்டத்தை மீறும் செயலாகும். சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தியா முழுமைக்கும் பொதுவானது.
தமிழ்நாட்டுக்கும், உச்சநீதிமன்றம் செல்வதற்கு வழி தெரியும். இந்த விவகாரத்தில் பிரச்சினை எழாமல் இருக்க ஒழுங்காற்று குழுவின் உத்தரவை ஏற்று நடைமுறைப்படுத்துவதுதான் அண்டை மாநிலங்களுக்கு இடையே நட்புறவை பலப்படுத்துவதாக இருக்கும். இது தெரியாதவரல்ல கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. அதுபோலவே நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கும் இது நன்றாக தெரியும்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
minkster duraimurgan speech about cauvery water issue