தண்டவாளத்தில் விரிசல் : பத்துக்கும் மேற்பட்ட ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்.!
near arakonam train stop for railway track damage
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரெயில்வே ஊழியர்களான கோபால் மற்றும் மரியம்தாஸ் இன்று காலை தண்டவாள பகுதியில் ரோந்து பணிக்குச் சென்றனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன் படி, தண்டவாள பராமரிப்பாளர்கள் மற்றும் சீரமைப்பு பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதையறிந்த அதிகாரிகள் சம்பவம் குறித்து தகவல் அளித்தபிறகு அந்த ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சென்னை நோக்கி வந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், வேலூர் கண்ட்டோன்மென்ட் மின்சார ரெயில் மற்றும் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் உள்ளிட்ட அனைத்தும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இதேபோல், சென்னையில் இருந்து சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ், சப்தகிரி எக்ஸ்பிரஸ், திருத்தணி மின்சார ரெயில்கள் உள்ளிட்டவை நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இதனால், பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளானார்கள். சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. அதன் பின்னர் ரெயில்கள் அனைத்தும் புறப்பட்டு சென்றன.
English Summary
near arakonam train stop for railway track damage