நாதக நிர்வாகி படுகொலை: என்ன செய்கிறது காவல்துறையும், உளவுத்துறையும்? - சீமான் ஆவேசம்.! - Seithipunal
Seithipunal


மதுரையில் அமைச்சர் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் துணைச்செயலாளராக இருந்த அன்புத்தம்பி பாலசுப்பிரமணியன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் தம்பியின் குடும்பத்தாரை எவ்வாறு ஆற்றுப்படுத்துவதென்று தெரியாது கலங்கி நிற்கிறேன். 

இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது? என்பதற்கு தம்பி பாலசுப்ரமணியனின் படுகொலையும் ஒரு சாட்சியாகும். என்ன செய்கிறது காவல்துறையும், உளவுத்துறையும்? இதுதான் மாநிலத்தைக் கட்டிக் காக்கும் இலட்சணமா? வெட்கக்கேடு! 

இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்கப் போகிறோம்? இறந்தவர்களின் உடலுக்குப் பூ போடுவதற்கா காவல்துறை? அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்குமே பாதுகாப்பு இல்லையென்றால், எளிய மக்களுக்கு இந்த மாநிலத்தில் என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது? இதென்ன தமிழ்நாடா? இல்லை, உத்தரப்பிரதேசமா? எங்குப் பார்த்தாலும் வன்முறைத்தாக்குதல்கள், கொலைகள், சாதிய மோதல்கள், போதைப்பொருட்களின் புழக்கம், ரௌடிகளின் அட்டூழியம், கூலிப்படைக்கலாச்சாரம், கள்ளச்சாராய விற்பனை. இப்படி தமிழ்நாட்டின் நிலை மிக மிக மோசமாக இருக்கிறது. 

குற்றங்கள் நடந்தேறியப் பிறகு, கண்துடைப்பு நடவடிக்கைகளை எடுப்பதும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதுமா அரசின் வேலை? குற்றங்களே நிகழாத ஒரு சமூகத்தைப் படைத்து, சட்டத்தின் ஆட்சியை முழுமையாக நிலைநிறுத்துவதுதானே அரசின் தலையாயக் கடமையும், பொறுப்பும்! அதனைச் செய்ய தவறிய அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன?

ஏற்கனவே, கன்னியாகுமரியில் எனது ஆருயிர் தம்பி சேவியர்குமாரை இதேபோல ஒரு படுகொலையால் இழந்தேன். இப்போது தம்பி பாலசுப்ரமணியனையும் இழந்து நிற்கிறேன். தம்பி பாலசுப்ரமணியனைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளையும், அதன் பின்புலத்தில் இருந்து இயக்கியவர்களையுமென மொத்தக் குற்றவாளிகளையும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, விரைந்து கைதுசெய்ய வேண்டும்; 

கைதுசெய்து, அக்கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறினால், மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்குமென எச்சரிக்கிறேன். தம்பி பாலசுப்ரமணியனுக்கு எனது கண்ணீர் வணக்கம்! என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk leader seeman condems ntk secretary murder case in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->