சாலை விபத்தில் மூளை உயிரிழப்பு அடைந்த இளைஞரின் உடல் பாகங்கள் தானம்.! - Seithipunal
Seithipunal


சாலை விபத்தில் மூளை உயிரிழப்பு அடைந்த இளைஞரின் உடல் பாகங்கள் இன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானம் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் மோட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன் என்பவரது மூத்த மகன் திவாகர்(27). இவர் கடந்த 23-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சொந்த வேலையாக ஜோலார்பேட்டை பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது ஆசிரியர் நகர் பகுதி அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் சாலையின் மையத்தில் உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த திவாகரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இதைத்தொடர்ந்து கடந்த 24-ம் தேதி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு திவாகர் மூளை உயிரிழப்பு அடைந்தார்.

இதையடுத்து மருத்துவர்கள் இந்தத் தகவலை திவாகர் குடும்பத்தினரிடம் தெரிவித்த நிலையில், திவாகர் குடும்பத்தார் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர். இருப்பினும் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் இணைந்து, திவாகரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர். 

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தவுடன், உறுப்பு தானத்துக்கு தேவையான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகத்தினர் மேற்கொண்டனர். இதில் இதயம் மற்றும் நுரையீரல்களை எடுத்துச் செல்ல சென்னையிலிருந்து ஒரு மருத்துவ குழுவும், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை எடுத்துச் செல்ல கோயம்புத்தூரில் இருந்து ஒரு மருத்துவ குழுவினரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

ஆனால் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த அவரது குடும்பத்தார், கண்களை மட்டும் தானமாக வழங்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.

ஏனென்றால் திவாகரின் தாயார் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், மகன் விபத்தில் சிக்கிய தகவலையும், அவர் ஆபத்தான நிலையில் இருந்ததையும் அவரது குடும்பத்தார் திவாகரின் தாயாரிடம் தெரிவிக்காமலே இருந்துள்ளனர்.

இதனால் விபத்தில் திவாகர் உயிரிழந்த தகவலை, உடல் நல்லடக்கத்துக்கு முன்பாக, அவரது தாயிடம் தெரிவித்து, மகனின் உடலை பார்த்து தாய் அழும் போது, கண்கள் அகற்றப்பட்டிருந்தால் முகம் பார்த்து அழும் திவாகரின் தாயார் மேலும் மனமுடைந்து போவார் என்ற ஒரு காரணத்துக்காகவே கண்களை தானம் வழங்க எங்களால் ஒப்புக்கொள்ள முடியாது என்று திவாகர் குடும்பத்தினர் மிகுந்த வருத்ததில் கண்ணீர் துளியுடன் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Organ donation of brain dead youth in road accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->