பல் பிடுங்கி பல்வீர் சிங் மனைவி தற்கொலைக்கு முயற்சியா? ஹென்றி திபேனின் பரபரப்பு கடிதம்! - Seithipunal
Seithipunal


இந்திய காவல் பணி அதிகாரிகள் சங்கத்திற்கு, மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர், ஹென்றி திபேன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "அன்பான இந்திய காவல் பணி அதிகாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு சேப்ட்டர் தலைவர் திரு.அபாஷ்குமார் .P.8, அவர்களே... தாங்கள், கடந்த 04.04.2023 அன்று "பல்வீர்சிங் I.P.S., என்பவருக்கு எதிராக காவல் நிலைய சித்திரவதை குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீடியா டிரையல் (Media Trial) நடக்கின்றது" என்ற தலைப்பில், பொதுநல நோக்குடன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தீர்கள். 

அந்த அறிக்கையை இன்னாருக்குத் தான் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல் "அன்பான எல்லோருக்கும்" என்று விளித்து வெளியிட்டிருந்தீர்கள். ஆகவே தாங்கள் அந்த அறிக்கையை எங்களுக்கும் சொன்னதாகக் கொண்டு, தற்போது அந்த உரிமையோடு, தாங்கள் எப்படி வெளிப்படையாக பல்வீர்சிங் I.P.S., அவர்கள் தொடர்பான உங்கள் கவலையையும் ஆதங்கத்தையும் அக்கறையுடன் பகிர்ந்தீர்களோ! அதே போல் நாங்களும் பல்வீர்சிங் I.P.S., அவர்கள் தொடர்பான எங்கள் கவலையையும் ஆதங்கத்தையும் அக்கறையுடன் வெளிப்படையாக பகிர்கின்றோம். எங்களின் இந்த அறிக்கையை தங்களுக்குச் சொன்னதாக எடுத்துக் கொண்டு, இதற்கு பதில் அளிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்,

தாங்கள் வெளியிட்ட அந்த அறிக்கையானது தமிழ்நாட்டிற்கு முற்றிலும் புதியதாகும். தமிழ்நாட்டில் இவ்வாறு காவல் நிலைய சித்திரவதைகள் தொடர்பான பிரச்சனைகள் வெளிப்பட்டு வரும் போது அவை தொடர்பாக "காவல்துறை அதிகாரிகளின் சங்கம்" என்ற பெயரில், யாரும் அதில் தலையிட்டு கருத்து சொன்னதில்லை. எனவே முதன்முறையாக அதுவும் காவல்துறையின் உயர்கல்வித் தகுதியான I.P.S தகுதி பெற்ற அதிகாரிகள் அடங்கிய சங்கத்தின் பெயரில் இப்படி ஒரு அறிக்கை வந்தது எங்களுக்கு பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது.

தாங்கள் வெளியிட்ட அந்த அறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அல்லாத அதிகாரிகள் என்று இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இப்பிரிவினை ஆரோக்கியமானதல்ல. இப்பிரிவினையை தங்களது அந்த அறிக்கை பெரிதாக்கிவிட்டதாகவே உணர்கிறோம்.

தங்களின் சங்க உறுப்பினரும் சக I.P.S அதிகாரியுமான பல்வீர்சிங் அவர்களைக் காப்பாற்ற துடித்து, உங்கள் ஆதங்கத்தை அந்த அறிக்கையின் வாயிலாக வெளியிட்டு இருந்தீர்கள். ஆனால், அதே ஆதங்கம் அந்த வழக்கு விசாரணையின் மெத்தனம் குறித்து ஏன் எழவில்லை? என்ற நியாயமான சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அப்பிரச்சினைகள் தொடர்பாக காவல் நிலை ஆணையின் (PSO) அடிப்படையில் நடந்த சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் நடத்திய விசாரணையின் முடிவுகளும், அதன்பின் உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா I.A.S., அவர்கள் நடத்திய விசாரணையின் முடிவுகளும் இன்னமும் வெளிவரவில்லையே என்று அது குறித்து தங்கள் சங்கம் எந்த ஆதங்கத்தையும் கவலையையும் வெளிப்படுத்தவில்லையே! என்ன காரணம்?

இந்நிலையில் ASP பல்வீர்சிங்,I.P.S. அவர்கள் தீவிர மன அழுத்தத்திற்காக தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாகவும், ஒரு சமயத்தில் . பல்வீர் சிங் அவர்கள், மன அழுத்தம் அதிகமாகி குடும்பத்திற்க்குள் பிரச்சினை ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக பல்வீர்சிங் அவர்களின் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், (அப்படி நடந்திருந்தால், அது பெண்கள் மீதான குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் படி குற்றம் இல்லையா? என்று தங்களை கேட்க விரும்புகின்றோம்?) அதே போல் அம்பாசமுத்திரம் சம்பவத்திற்கு பிறகும் அவ்வாறு ஒருமுறை பல்வீர்சிங்கின் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், காவலர்கள்தான் கதவை உடைத்து அவரைக் காப்பாற்றியதாகவும் செய்திகள் புதிதாக கசிந்துள்ளன. 

இச்செய்திகள் உண்மையா? என்று எங்களுக்கு தெரியவில்லை. உண்மையாக இருக்கக் கூடாது என்று தான் நாங்களும் விரும்புகிறோம். இது குறித்து தாங்கள் விசாரித்து ஆவன செய்வீர்கள் என்று நம்புகின்றோம். "அன்புள்ள எல்லோருக்கும்" என்று வெளி உலகத்திற்கும் அந்த விசாரணையின் முடிவை தெரிவிப்பீர்கள் என்று நம்புகின்றோம். ஏனென்றால் பல்வீர்சிங், I.P.S., அவர்கள் ஒரு தனி மனிதன் அல்ல. அவர் ஒரு அரசு அதிகாரி ஆவார். 

அதுவும் ஒழுங்குப் படை (Disciplinary Force) எனும் காவல்துறையில் பணிபுரிபவர் ஆவார். ஆகவே இத்தகைய மன அழுத்தத்துடன் அவர் காவல்துறையில் நீடிப்பது என்பது, பொது மக்களுக்கு மட்டுமல்ல, அவருக்குமே அது தீங்கை தரலாம் என்று நாங்கள் நினைக்கின்றோம். (தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை நீக்குவதற்காக புத்தாக்கப் பயிற்சி (Wellness Program) என்ற பெயரில் நடத்தப்படுகின்ற பயிற்சியில், அவரோ அவரது மனைவியோ இதுவரை பங்கு பெற்று இருக்கிறார்களா என்று எங்களுக்கு தெரியவில்லை). 

இச்செய்திகள் உண்மையானவையாக இருந்தால், அவரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தக் கோருவதும், உடனடியாக காவல்துறை பணியிலிருந்து நிரந்தரமாக அவரை நீக்கம் செய்யக்கோருவதும் அவசியமாக உள்ளது என்பதை ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவராகிய தாங்கள் நன்றாக அறிவீர்கள் என்று நம்புகின்றோம்.

இச்செய்தி குறித்த தங்களின் எதிர்வினை என்ன என்று அறிய தாங்கள் "அன்பான எல்லோருக்கும்" என்று விளித்தழைத்த அந்த அன்பான நாங்களும் ஆவலாக உள்ளோம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அந்த கடிதத்தில் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palveer Singh issue Peoples watch


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->