ராசிபுரம் புதிய பேருந்து நிலைய விவகாரம்! மறைமுகமாக நடந்த பேரம், ஊழல் - வெளியான ஒரு அதிர்ச்சி அறிக்கை! - Seithipunal
Seithipunal


ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை தனியார் நில வணிக நிறுவனத்துக்கு சாதகமாக படையப்பா நகரில் அமைக்க தீர்மானிக்கப்பட்டதன் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட பேரங்கள், நடந்த ஊழல்கள் ஆகியவை குறித்து விரிவான விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என்று, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், நகரத்திற்கு வெளியே 8.5 கி.மீ தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனியார் நிலவணிக நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தின் மதிப்பை பல கோடி உயர்த்தும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

ராசிபுரம் பேருந்து நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திற்கு செல்லும் பாதைகள் சற்று குறுகலாக இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜூலை 2&ஆம் தேதி நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில், ராசிபுரத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான தீர்மானம், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

அடுத்த 3 நாட்களில் அதாவது ஜூலை 5&ஆம் நாள், அரசியல் கட்சிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஷ்குமார் என்பவர், புதிய பேருந்து நிலையம் அமைக்கத் தேவையாக நிலத்தை எவரேனும் கொடையாக கொடுக்க வேண்டும் என்று கூறினார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

ஆனால், கருத்துக் கேட்புக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே, ராசிபுரத்திலிருந்து 8.5 கி.மீ தொலைவில் உள்ள அணைப்பாளையம் படையப்பா நகரில் புதிய பேருந்து நிலையத்தை நிலையத்தை அமைப்பதற்காக 7.03 ஏக்கர் நிலத்தை படையப்பா நகர் என்ற பெயரில் மொத்தம் 140 ஏக்கரில் அமைந்துள்ள புதிய மனைப் பிரிவுகளை விற்பனை செய்யும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் பாஸ்கர் என்பவர் ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் பெயருக்கு கொடையாக வழங்கி, பத்திரப் பதிவும் செய்து கொடுத்துள்ளார். அதற்கு முன்பாகவே கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியே பேருந்து நிலையத்திற்கான நிலத்தை கொடையாக வழங்குவதாக நகராட்சி ஆணையருக்கு நில வணிகர் பாஸ்கர் கடிதம் எழுதியிருக்கிறார்.

அதை ஏற்றுக்கொள்வதாக ஜூன் 26ஆம் நாள் நகராட்சி ஆணையர் பதில் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இந்த உண்மைகள் எதையும் நகராட்சிக் கூட்டத்திலோ, கருத்துக் கேட்புக் கூட்டத்திலோ தெரிவிக்காமல் பேருந்து நிலையம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு, அதன் பிறகு அந்த பேருந்து நிலையத்தை படையப்பா நகரில் அமைப்பது என்று நகராட்சி நிர்வாகமும், ஆளும் திமுகவின் நிர்வாகிகளும் தீர்மானித்துள்ளனர்.

ராசிபுரத்தைப் பொறுத்தவரை அதன் தொழில் மற்றும் வணிகத்திற்கு ஆத்தூர், திருச்செங்கோடு, பேளுக்குறிச்சி மார்க்கத்தில் உள்ள கிராமங்களையே நம்பியுள்ளது. ஆனால், புதிதாக அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையம் இதற்கு எதிர்த்திசையில் 8.5 கி.மீ தொலைவில் உள்ளது.

அதனால், இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள், ராசிபுரத்திற்கு செல்லாமல் சேலம், நாமக்கல் நகரங்களுக்கு சென்று விடும் வாய்ப்புள்ளது. அவ்வாறு சென்றால், ராசிபுரம் அதன் தொழில் மற்றும் வணிக ஆதாரங்களை முற்றிலும் இழந்துவிடும்.

ராசிபுரத்தில் இப்போதுள்ள பேருந்து நிலையம் சிறப்பாகவே உள்ளது. நகரைச் சுற்றிலும் புறவழிச்சாலை அமைப்பதுடன், நகர சாலைகளை விரிவாக்கம் செய்தாலே நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணமுடியும். அவ்வாறு செய்தால் புதிய பேருந்து நிலையம் தேவையில்லை.

ஒருவேளை புதிய பேருந்து நிலையம் அமைத்தாலும், அதை நகரில் இருந்து 2 கி.மீ சுற்றளவில் அமைத்தால் தான் தொழில் மற்றும் வணிக வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்ள முடியும். மாறாக, 8.5 கி.மீக்கு அப்பால் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், அதனால் ஏற்படும் பயன்களை விட பாதிப்புகளே அதிகமாக இருக்கும்.

ராசிபுரம் பேருந்து நிலையத்தைப் பொறுத்தவரை அது மக்களின் நலனுக்காக அமைக்கப்படவில்லை; படையப்பா நில வணிக நிறுவனத்தின் நலனுக்காகவே அமைக்கப்படுகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. படையப்பா நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், அதைச் சுற்றியுள்ள தனியார் நில வணிக நிறுவனத்திற்கு சொந்தமான 140 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 25 மடங்கு முதல் 50 மடங்கு வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால், அந்த நிறுவனத்திற்கு பல நூறு கோடி ரூபாய் கூடுதல் இலாபம் கிடைக்கும் என்றும், அதைக் கருத்தில் கொண்டு தான் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

நில வணிகத்திற்கு கோடிக்கணக்கில் லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ராசிபுரம் நகர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்துக் கட்சி மற்றும் சேவை அமைப்புகளை உள்ளடக்கிய ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பின் சார்பில் முழு அடைப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட 7 வகையான போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழக அரசோ. மாவட்ட நிர்வாகமோ இதுவரை இந்த சிக்கலில் தலையிட்டு ராசிபுரம் மக்களுக்கு நீதி வழங்குவதற்கு முன்வரவில்லை.

ராசிபுரம் நகர மக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, படையப்பா நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

புதிய பேருந்து நிலையத்தை தனியார் நில வணிக நிறுவனத்துக்கு சாதகமாக படையப்பா நகரில் அமைக்க தீர்மானிக்கப்பட்டதன் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட பேரங்கள், நடந்த ஊழல்கள் ஆகியவை குறித்து விரிவான விசாரணை நடத்தவும் அரசு ஆணையிட வேண்டும்” என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss Condemn to TNGovt Rasipuram Bus Stand


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->