மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன் - அன்புமணி இராமதாஸ் அறிக்கை! - Seithipunal
Seithipunal


பாட்டாளி சொந்தங்களுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத  குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு, உங்களின் ஐயங்களைப் போக்கவே இந்த மடல்.

ஊமை சனங்களுக்கு சமூகநீதியும், அரசியல் அதிகாரமும் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே 1989 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் சென்னை சீரணி அரங்கில் நமது இனக்காவலர்  மருத்துவர் அய்யா அவர்களால் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 28 தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.  அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது.

கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள்  கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்.எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக மருத்துவர் அய்யா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன். எனது பணிகளுக்கு பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நம்முன் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய இரு இலக்குகள் உள்ளன. முதலாவது, வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது. இரண்டாவது, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த காலங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று நமது வலிமையை நிலை நிறுத்துவது.

மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது பாட்டாளி சொந்தங்களின் 12 ஆண்டு கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கிய மருத்துவர் அய்யா அவர்கள், அதற்காக மாநாட்டுக்குழு தலைவராக என்னை நியமித்திருக்கிறார்.

மருத்துவர் அய்யா அவர்கள் இட்ட இந்தப் பணியை வெற்றிகரமாக முடிக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் திட்டமிடப்பட்டவாறு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளையும் நான் ஒருங்கிணைத்து வருகிறேன். அதே போல் மாநாட்டுக்கு பாட்டாளி சொந்தங்களை அழைத்து வருவதற்கான களப்பணிகளை அனைத்து நிலை நிர்வாகிகளும் தொடர்ந்து முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்.

2026 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை மருத்துவர் அய்யா அவர்களது வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது பெரும் கடமையாகும். அந்தக் கடமையை  அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் சரியான நேரத்தில் செய்து முடிப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் அது தான் என் தலையாய பணியாகும்.

மாநாட்டுப் பணிகளையும் சட்டப்பேரவை தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளையும் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் களத்தில் மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன்... அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில்  பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை. அதற்காக உங்களை சந்திக்க விரைவில் உங்களை தேடி வருவேன்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Anbumani Ramadoss Statement Dr Ramadoss


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->