பா.ம.க. 36&ஆம் ஆண்டு விழா: அனைத்து ஊர்களிலும் கொடியேற்றி கொண்டாடுங்கள்! அன்புமணி ராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பா.ம.க. 36&ஆம் ஆண்டு விழா: அனைத்து ஊர்களிலும் கொடியேற்றி கொண்டாடுங்கள் என தொண்டர்களுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ள கட்சியும், சமூகநீதிக்காக சமரசமின்றி போராடும் கட்சியுமான பாட்டாளி மக்கள் கட்சி வரும் 16&ஆம் நாள் 35 ஆண்டுகளை நிறைவு செய்து 36&ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1989&ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16&ஆம் நாள் சென்னை கடற்கரை சீரணி அரங்கில் தொடங்கபட்ட பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த 35 ஆண்டுகளில் பல்வேறு மைல்கற்களை கடந்து வந்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த 35 ஆண்டுகளில் நிகழ்ந்த அரசியல் மாற்றமாக இருந்தாலும், சமூக முன்னேற்றமாக இருந்தாலும் அதன் பின்னணியில் பா.ம.க. இருக்கும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.



தமிழ்நாட்டு அரசியலில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவது பாட்டாளி மக்கள் கட்சி தான்.  பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரையிலான 35 ஆண்டுகளில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக 51 ஆவணங்களை வெளியிட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். தமிழ்நாட்டில்  முதன்மைத் தொழிலான வேளாண்மைக்கு என தனி நிழல்நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான். 2008&ஆம் ஆண்டில் தொடங்கி 17 ஆண்டுகளாக  வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாகத் தான் தமிழ்நாட்டில் இப்போது திமுக அரசால் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மக்களைப் பாதிக்கும் எந்த சிக்கலாக இருந்தாலும் அதற்கான முதல் குரல் பா.ம.க.விடம்  இருந்து தான் ஒலிக்கும். பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்ப்பால், தமிழக அரசால் திரும்பப்பெறப்பட்ட மக்கள் விரோத செயல்பாடுகள் ஏராளம். அதனால் தான் மக்கள் தங்களின் குரல்களை வெளிப்படுத்துவதற்காக பாட்டாளி மக்கள் கட்சியை தேடி வருகின்றனர். இதுவே பா.ம.க.வுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.



தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டை வென்றெடுத்தப் பிறகு  பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கிய மருத்துவர் அய்யா அவர்கள், தமது இடைவிடாத போராட்டத்தின் காரணமாக தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5%, அருந்ததியருக்கு 3%, வன்னியர்களுக்கு 10.50%  ஆகியவற்றை வென்றெடுத்தார். தேசிய அளவில் மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை மருத்துவர் அய்யா அவர்கள் தான் போராடிப் பெற்றுத் தந்தார்.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இட  ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவியேற்ற பிறகு தான் மருத்துவர் அய்யா அவர்கள் வழிகாட்டுதலின் அடிப்படையில் அப்பிரிவினருக்கு முறையே 15%, 7.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இப்படியாக 6 வகையான இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்த பெருமையும், சிறப்பும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. இந்த உண்மையை எவராலும் மறுக்க முடியாது.

தமிழ்நாட்டில் மதுவிலக்குக்காக 400&க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியது, சட்டப்போராட்டம் நடத்தி 3321 மதுக்கடைகளை மூடியது, மதுவிலக்குக்கு ஆதரவான மக்கள் எழுச்சியை ஏற்படுத்தியது, தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு காரணமாக இருந்தது, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தது என தமிழ்ச் சமூகத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆற்றிய பணிகளின் பட்டியல் மிகவும் நீளமானது.



இவை அனைத்துக்கும் காரணமான பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன நாள் கொண்டாட்டத்துக்கு உரியது என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதுமட்டுமின்றி, எந்த ஓர் அரசியல் கட்சியின் நோக்கமும் ஆட்சியைப் பிடிப்பதாகத் தான் இருக்கும். இந்த இலக்கை நோக்கிய நமது பயணத்தின் வேகத்தை ஆய்வு செய்யவும்,   இலக்கை அடைவதற்காக மறு உறுதி ஏற்றுக் கொள்ளவும் உரிய நாள் தான் ஜூலை 16&ஆம் தேதியாகும். அந்த நாளில் பாமகவின் 36&ஆம் ஆண்டு விழாவை கட்சியினர் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். 2026&ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியமைக்க வேண்டும் என்ற இலக்கை அடைய உறுதியேற்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் ஆண்டு விழாவையொட்டி, வரும் 16&ஆம் தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மக்களை சந்திக்க உள்ளேன். அதேபோல், தமிழ்நாடு முழுவதும் அனைத்து பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட வேண்டும். அதற்கான நிகழ்ச்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகளும், பா.ம.க.வின் இணை மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்க  வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி நமது சாதனைகளை விளக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk leader anbumani ramadoss statement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->