போக்சோ வழக்கில் விடுதலை! உடனே மேல்முறையீடு செய்ய காவல்துறைக்கு உத்தரவு!
POCSO case TN Police
போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர் விசாரணை நீதிமன்றத்தில் விடுதலையானால், அந்த தீர்ப்புக்கு தாமதமின்றி மேல்முறையீடு செய்ய காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சமீபத்தில், ஒரு போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் விடுதலையடைந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், "விசாரணை நீதிமன்ற தீர்ப்பில் பல்வேறு குறைகள் உள்ளன. அரசு ஏன் உடனடியாக மேல்முறையீடு செய்யவில்லை?" என்று கேள்வி எழுப்பியது.
இதையடுத்து அனுப்பப்பட்ட கடிதத்தில், "போக்சோ சட்டத்திற்குட்பட்ட வழக்குகள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமானவை. எனவே, குற்றவாளி விடுதலையானால், விசாரணை அதிகாரிகள் உடனடியாக முடிவை உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மேலும், உரிய சட்ட ஆலோசனை பெற்று, மேல்முறையீடு செய்ய தேவையான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதை உறுதிப்படுத்த, தமிழகம் முழுவதும் உள்ள காவல் ஆய்வாளர்கள், புலன்விசாரணை அதிகாரிகள், அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை விடுப்பது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.