பிரதமருடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சந்திப்பு.!
Puducherry Lieutenant Governor Kailashnathan meets Prime Minister Narendra Modi
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷாநாதன் சந்தித்து பேசினார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கடந்த 12-ம் தேதி அரசுமுறை பயணமாக டெல்லி சென்றார். இந்நிலையில் நேற்று துணைநிலை ஆளுநர், பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து பேசினார்.
சந்திப்பின்போது, புதுச்சேரிக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் நிதி உதவியோடு தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் நிலை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
பிரதமரின் நலத்திட்டங்கள் தகுதியுடைய பயனாளிகளுக்கு சென்றடைய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் துணைநிலை ஆளுநர் எடுத்துரைத்தார்.
விவரங்களை கேட்டறிந்த பிரதமர் புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார்.
இந்தநிலையில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் மத்திய அரசிடமிருந்து புதுச்சேரி மாநில திட்ட வளர்ச்சிக்காக எந்தெந்த திட்ட செயலாக்கத்திற்கு எந்த முறையில் நிதியுதவிகள் பெறலாம் என்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள புதுச்சேரி மாநில நிதித்துறை செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்துள்ளார்.
இந்த கமிட்டியில் முன்னாள் வணிகவரி ஆணையர்( Commissioner, CT),முன்னாள் திட்டத்துறை இயக்குனர் சாந்தமூர்த்தி மற்றும் முன்னாள் வணிகவரி அதிகாரி தனராமன் ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்து உள்ளார். இந்த கமிட்டி 3 மாதத்தில் தங்கள் ஆலோசனை/ பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
English Summary
Puducherry Lieutenant Governor Kailashnathan meets Prime Minister Narendra Modi