தமிழகம்: 16 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கொடூர ஆசியரின் அதிர்ச்சி பின்னணி!
Pudukottai Harassment govt school teacher Arrest
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். கிளிக்குடி பெருமாள் பட்டியில் உள்ள பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் கே. அடைக்கலம், விளையாட்டு பயிற்சியின் போது மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர் அடைக்கலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இலுப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அடைக்கலம் கைது செய்யப்பட்டார்.
கைதான அடைக்கலம் கடந்த பத்து ஆண்டுகளாக பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விளையாட்டு பயிற்சியின்போது, பந்துகளை எடுத்துக் கொடுக்கும் சாக்கில் மாணவிகளின் உடலை தொடுவதாகவும், முகம் பார்த்து பேசாமல் உடலின் அங்கங்களை பார்த்து பேசுவதாகவும் 16க்கும் மேற்பட்ட மாணவிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
மணப்பாறையில் தனியார் பள்ளி தாளாளரின் கணவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குள்ளாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Pudukottai Harassment govt school teacher Arrest