ராஜ ராஜ சோழன் இந்து தான் என விளக்கம் அளித்த எச்.ராஜா!
Raja Raja Cholan Hindu explained H Raja
இஸ்லாத்தில் சன்னி, ஷியா! கிறிஸ்தவத்தில் பெந்தகோஸ்த், கத்தோலிக்! ஹிந்து மதத்தில் சைவம், வைணவம்!
மதுரையில் பாஜகவின் சார்பில் செய்தியாக சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் கலந்து கொண்டு பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா இயக்குனர் வெற்றிமாறனின் ராஜ ராஜ சோழன் பற்றிய கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது "ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என இயக்குனர் வெற்றிமாறன் சொல்கிறார். அவர் ராஜ ராஜ சோழன் கட்டிய இரண்டு மசூதி அல்லது சர்ச் எங்கு உள்ளது என சொல்ல வேண்டும். ராஜ ராஜ சோழன் ஒரு சிவன் பக்தன். தன் பெயரை சிவபாதசேகரன் என தன்னை அழைத்துக் கொண்ட மாமன்னன் தான் அவர்" என பேசிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது குறுக்கிட்ட பத்திரிக்கையாளர் ஒருவர் "ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது. சைவம், வைணவம் போன்ற சமயங்கள் தான் இருந்தது. ஹிந்து என்ற வார்த்தையே கிடையாது என வெற்றிமாறன் கூறினார்" என வாதம் வைத்தார்.
இதற்கு பதில் அளித்த எச்.ராஜா "தேச விரோதிகள், முட்டாள்கள் பேசும் பேச்சை நாம் பேசக்கூடாது. நான் சொல்கிறேன் ஹிந்து என்பது மதம் அல்ல. என்னை பின்பற்றும் ஹிந்துத்துவவாதிகள் இதை தவறாக நினைக்க மாட்டார்கள் என எனக்கு தெரியும். இந்து என்பது தேசம். அதனால் தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்து மதத்தை நேரடியாக விளக்கவில்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்துக்கள் என்பவர்கள் கிறிஸ்துவத்தையும் இஸ்லாத்தையும் சௌராஷ்ட்ரியத்தையும் சாராத அனைவருமே ஹிந்துக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்துக்கள் என்பது நாட்டையும் கலாச்சாரத்தையும் குறிக்கின்றது. இந்த மூன்று மதங்களையும் குறிப்பிட காரணம் அவை அந்நிய மதங்கள். இவை தவிர இந்திய மண்ணில் பிறந்த அனைத்து மதங்களையும் ஹிந்து மத என அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. இந்தியாவின் சரித்திரம் அந்நியர் படையெடுப்பில் தான் ஆரம்பிக்கிறதா? அதற்கு முன் என்னவாயிற்று? அதற்கு முன் உள்ள சரித்திரத்தை அனைவரும் படிக்க வேண்டும்.
இந்தய நாட்டில் உள்ள மதங்களை இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை வைத்து புரிந்து கொள்ள வேண்டும். சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்தவர் ஆதிசங்கரர். அவரின் அவதார கால சமயத்தில் 72 வழிபாட்டு முறைகள் இருந்தன. அந்த வழிபாடுகளில் உள்ள ஒற்றுமையை நெறிமுறைப்படுத்தி ஆறு வழிபாடு முறைகளாக தொகுத்தவர் ஆதிசங்கரர். சமீபத்தில் ஆதிசங்கரர் சிலையை கேதர்நாத்தில் திறந்து வைத்த பிரதமர் மோடி சிவனே ஆதிசங்கரர் அவதாரம் புகழ்ந்து கூறியுள்ளார்.
ஆதிசங்கரருக்கு ஆறு மதங்களின் நிறுவியவர் என பெயரும் உண்டு. அவர் அந்த ஆறு பிரிவில் சிவனை வழிபடுபவர்கள் சைவர்கள், விஷ்ணுவை வழிபடுபவர்கள் வைஷ்ணவர்கள், முருகனை வழிபடுபவர்கள் கௌமாரர்கள், சக்தியை வழிபடுபவர்கள் சாஸ்திரர்கள், சூரியனை வழிபடுவார்கள் சௌரர்கள் என வகைப்படுத்தி உள்ளார். அதனால் ஹிந்து வேறு சைவம் வேறு வைணவம் வேறு என சொல்வது அர்த்தமற்றது. வேதம் வேறு தமிழ் வேறு இல்லை! வேதம் வேறு சைவம் வேறு இல்லை!
எனவே ராஜ ராஜ சோழன் இந்து தான். ராஜ ராஜ சோழன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும் ஹிந்து தான் ஆதிசங்கரர் வகுத்த மதத்தின் படியும் அவர் ஹிந்து தான். ஆதிசங்கரர் வகுத்த ஆறு பகுதி பிரிவுகளும் இந்து மதம் தான்.
இஸ்லாமிய மதத்தில் உள்ள சன்னி பிரிவினர் இஸ்லாமியர்களா? ஷியா பிரிவினர் இஸ்லாமியர்களா? அகமதியாஸ் பிரிவினர் இஸ்லாமியர்களா? இவர்களில் யார் இஸ்லாமியர்கள். கிறிஸ்தவத்தில் பெந்தேகோஸ்த்கள் கிறிஸ்தவர்களா? கத்தோலிக்கர்கள் கிறிஸ்தவர்களா? இவர்களில் யார் கிறிஸ்தவர்கள்.
எனவே இதுபோன்று இந்தியாவில் பிறந்த அனைத்து மதங்களும் இந்து மதங்கள் தான் இதை தான் அரசியலமைப்புச் சட்டமும் சொல்கிறது, அம்பேத்கரும் இதையே சொல்கிறார். இவர்களின் நோக்கமே ஹிந்துக்களிடையே பிரிவினை உருவாக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்" என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
English Summary
Raja Raja Cholan Hindu explained H Raja