புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியை தொழில் மண்டலமாக மாற்றுவதா?..! கொதித்தெழும் இராமதாஸ்..!!
Ramadoss tension about Puzhal aeri occupying by sip-cot industry permission
புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொழில் மண்டலமாக மாற்ற அரசு அனுமதி செய்யக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மரு.இராமதாசு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில்.,
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொழில் மண்டலம் அமைக்க சிட்கோ நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக அனுமதி கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் விண்ணப்பித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தை செயல்படுத்த அனுமதித்தால் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
சிறுதொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தி வரும் சிட்கோ எனப்படும் சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் பெண் தொழில் முனைவோருக்காக தனி தொழில் மண்டலம் ஒன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளது. அதற்காக சிட்கோ நிறுவனம் தேர்வு செய்துள்ள இடம் சென்னை அருகே புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைந்திருக்கிறது. அங்கு தான் தொழில் மண்டலம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சிட்கோ நிறுவனம், அந்த வளாகம் அமையவுள்ள 53 ஏக்கர் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதி என்பதிலிருந்து தொழில் செய்ய ஏற்ற இடமாக மாற்றித் தர வேண்டும் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் விண்ணப்பித்திருக்கிறது. எனினும் அது இன்னும் ஏற்கப்படவில்லை.
வேலைவாய்ப்புகளையும், சிறுதொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் தொழில் மண்டலங்களை அமைப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இதுபோன்ற சிப்காட் தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு கட்டங்களில் வலியுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக மகளிர் தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்குடன் பெண்களுக்காக தனி தொழில் மண்டலத்தை அமைப்பது உன்னதமான திட்டம் ஆகும். ஆனால், அத்தகைய தொழில் மண்டலத்தை சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைப்பது தான் மிகவும் ஆபத்தானது ஆகும்.
புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அந்த ஏரியை ஒட்டிய பல கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளன. அப்பகுதிகளில் பெய்யும் மழை சிறு சிறு ஓடைகளாக உருவாகி புழல் ஏரிக்கு வந்து சேரும். அதற்கு தடை ஏற்படாத வகையில் நீர்ப்பிடிப்பு பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு பாதுகாக்காமல் அப்பகுதியில் தொழில் மண்டலம் அமைக்கப்பட்டால், அந்தப் பகுதியில் பெய்யும் மழைநீர் அங்கிருந்து வெளியேற முடியாது; பிற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீரும் ஓடுவதற்கு வழி இல்லாமல் தேங்கும். இதனால் பெருமழைக் காலங்களில் அப்பகுதியே வெள்ளக்காடாக மாறி பேரழிவு உருவாகும்.
இதற்கு முன் அம்பத்தூர் புதூர், திருப்பெரும்புதூரையடுத்த ஓரகடம் ஆகியவையும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக இருந்தவை தான். ஆனால், காலப்போக்கில் அவை தொழில்பகுதிகளாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் மாற்றப்பட்டன. அதன் விளைவு அந்தப் பகுதிகளில் சாதாரண மழை பெய்தாலே பெருவெள்ளம் ஏற்படுகிறது. அத்தகைய நிலை மகளிர் தொழில் மண்டலத்திற்கும் ஏற்பட்டுவிடக்கூடாது.
நீர்நிலைகளின் நீர்த்தேக்கப் பகுதிகள் மட்டுமின்றி, நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் பாதுகாக்க வேண்டும்; அந்தப் பகுதிகளில் எந்தவிதமான கட்டுமானங்களையும் அனுமதிக்கக் கூடாது என்று 2005-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அதன்பின்னர் கடந்த 15 ஆண்டுகளில் இதேபோன்று பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தீர்ப்புகளுக்கு எதிரான வகையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் தன்மையை மாற்றும் வகையிலான எந்த ஒரு முயற்சியையும் எந்த காரணத்திற்காகவும், எந்த காலத்திலும் அரசு அனுமதித்துவிடக் கூடாது.
புழல் ஏரியின் நீர்த்தேக்கப் பகுதி 4500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. ஆனால், காலப்போக்கில் ஏரியின் நீர்த்தேக்கப் பகுதி பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. சென்னையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளங்களுக்கு நீர்நிலைகளின் நீர்த்தேக்கப் பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் செய்யப்பட்ட இத்தகைய ஆக்கிரமிப்புகள் தான் காரணமாகும். இந்த அனுபவங்களுக்கு மதிப்பளித்து புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை தொழில் மண்டலமாக மாற்றும் கோரிக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது. மாறாக, நீர்நிலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பகுதிகளில் மிக அதிக எண்ணிக்கையில் தொழிற்பேட்டைகளையும், தொழில் மண்டலங்களையும் அரசு அமைக்க வேண்டும்.
Tamil online news Today News in Tamil
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு
9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்
TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...
English Summary
Ramadoss tension about Puzhal aeri occupying by sip-cot industry permission