மிரள வைத்த மிக்ஜாம் புயல் - ரேஷன் கடைகளில் டன் கணக்கில் பொருட்கள் சேதம்.!
ration shops damageed for michuang strom
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட அதிகனமழையால் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதேபோல், மாநகரில் உள்ள பல ரேஷன் கடைகளில் வெள்ளநீர் புகுந்தது. இந்தநீரினை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அணைத்து கடைகளையும், விடுமுறை நாளான நேற்று திறந்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு மக்களுக்கு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட போது வெள்ளநீர் புகுந்த கடைகளில், அடிப்பகுதியில் இருந்த ஏராளமான அரிசி, பருப்பு, சர்க்கரை மூட்டைகள் தண்ணீரில் ஊறி, பூஞ்சாணம் பூத்துக் கிடந்தன. மேலும் கடும் துர்நாற்றமும் வீசியது.
இருப்பினும் ஊழியர்கள், கடைகளுக்குள் தேங்கிய நீரை வெளியேற்றிவிட்டு சுத்தம் செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட அனைத்து கடைகளிலும் கடை ஊழியர்கள் பாதிப்பை புகைப்படம் எடுத்து, உயரதிகாரிகளுக்கு அனுப்பினர்.
இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது, "வெள்ளத்தால் சேதமடைந்த கடைகளுக்கு ஏற்பட்ட இழப்பை, அரசு ஈடுசெய்ய வேண்டும். நிறுவனங்கள் கணக்கில் சேர்க்கக் கூடாது. பெரு வெள்ளம் ஏற்படக் கூடிய பகுதிகளில் கடைகளை உயரமாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ration shops damageed for michuang strom