கொடைக்கானலில் போலி ஆவணங்கள் பயன்படுத்தி பத்திரப் பதிவு! முதல் குற்றவாளி கைது!
registration using fake documents woman arrested
கொடைக்கானலில் வீடு, நிலம் என பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் கோபி. கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதியில் இவருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, நிலம் உள்ளது.
இந்த சொத்துக்களை கொடைக்கானலை சேர்ந்தவர்கள் சிலர் போலி ஆவணங்களை பயன்படுத்தி மோசடி செய்து பத்திரப்பதிவு செய்துள்ளதாக கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரணை செய்த நீதித்துறை நடுவர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்த கொடைக்கானல் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் கொடைக்கானல் உதவி ஆய்வாளர் குற்றம் சாட்டப்பட்ட கரூரை சேர்ந்த சாந்தி, சந்திரா சேகர் மற்றும் கொடைக்கானலை சேர்ந்த கிருஷ்ணசாமி, கணேஷ், மருதுபாண்டி உள்ளிட்ட 11 பேர் மீது ஆள்மாறாட்டம் மோசடி ஆவணம் தயார் செய்தது போன்ற 7 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 29ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கரூரை சேர்ந்த சாந்தியை போலீசார் கைது செய்தனர்.
English Summary
registration using fake documents woman arrested