வாலிபர் மரணத்தில் சந்தேகம்.. உறவினர்கள் சாலை மறியல்..!!
Relatives roadblock protest for youngster mysterious death
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற 35 வயது இளைஞர், புகைப்படக் கலைஞராக பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இவர் நள்ளிரவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக நெய்வேலி வடக்குத்து காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதையடுத்து ராஜ்குமாரின் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அதனை வடக்குத்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை ராஜ்குமார் இறந்துவிட்ட செய்தியறிந்த அவரின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அங்கு ராஜ்குமார் வடக்குத்து காவல்நிலையம் எதிரே உள்ள சாலையில் மர்மமான முறையில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த உறவினர்கள் ராஜ்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இன்று அதிகாலை முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி - கும்பகோணம் சாலையில் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியில் ராஜ்குமாரின் மரணத்திற்கு காரணம் போலீசார் தான் என்று கூறிய உறவினர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் 200 போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும் வருவாய்த்துறையினர் ராஜ்குமாரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து சுமார் 3 மணிநேரம் கழித்து சாலை மறியலைக் கைவிட்டு ராஜ்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
English Summary
Relatives roadblock protest for youngster mysterious death