இனி நாங்களே நேரடியாக கொள்முதல் பண்ணிக்குறோம்! அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய அமைச்சர்!
Sakkarapani Wheat issue
நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பேரிடர் காலங்களில் நிவாரண உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு மேலும் குறைத்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டின் மொத்த தேவையில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விநியோகத்தை குறைத்து இருப்பது பொது மக்களுடைய அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த கோதுமை ஒதுக்கீடு 8,132 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவிக்கையில், "தமிழ்நாட்டிற்கான கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்திருப்பது வேதனையளிக்கிறது.
இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்; முதலமைச்சரின் அனுமதி பெற்று, மத்திய அமைச்சரை நேரடியாக சந்தித்து வலியுறுத்துவோம்" என்றார்.
இதற்கிடையே, வரும் ஆண்டுகளில் இருந்து 15,000 மெட்ரிக் டன் கோதுமையை தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு அமைச்சர் சக்கரபாணி கடிதம் எழுதி உள்ளார்.