நியாயமான கோரிக்கைங்க, விரைந்து நிறைவேற்றி கொடுங்கள் - தமிழக அரசுக்கு சீமான் விடுத்த உருக்கமான கோரிக்கை!
Seeman Say About clean staff request
தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்களின் நியாயமானக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக்காவலர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இயக்குபவர்களின் வாழ்வியல் போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் மிக மிக நியாயமானவையாகும். அவர்களது கோரிக்கை முழக்கங்களிலிருக்கும் தார்மீகத்தை உணர்ந்து, அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.
தமிழ்நாடு கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் 60,000 தூய்மைக்காவலர்களின் மாத ஊதியத்தை 10,000 ரூபாயாக உயர்த்தி, அதனை ஊராட்சிகள் மூலமாக நேரடியாக வழங்க வேண்டுமெனவும், அவர்களது பணிநேரத்தை முறைப்படுத்த வேண்டுமெனவும், கிராம ஊராட்சிகளில் காலியாகவுள்ள தூய்மைப்பணியாளர்களது இடங்களை நிரப்ப வேண்டுமெனவுமானப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வரும் தமிழ்நாடு ஊராட்சிப்பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புக்கு என்றென்றும் துணைநிற்போமெனவும், அவர்களது கோரிக்கைகள் முழுமையாக வெல்ல உற்றத் துணையாகவும், உளவியல் பலமாகவும் இருப்போமெனவும் இச்சமயத்தில் உறுதியளிக்கிறேன்.
ஆகவே, இவ்விவகாரத்தில் சிறப்புக் கவனமெடுத்து, தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்களின் உரிமைகளை நிலைப்படுத்தி, வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த அவர்களது நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman Say About clean staff request