போலிச் சான்றிதழ் மூலம் தமிழர்களின் வேலை வாய்ப்பை பறித்த வட மாநிலத்தவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்! சீமான் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


போலிச்சான்றிதழ் மூலம் தமிழர்களது வேலைவாய்ப்புகளைப் பறித்து மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

நாம் நமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசுப் பணியிடங்களில் போலிச்சான்றிதழ் கொடுத்து 300க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் வேலைக்குச் சேர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. முறைகேடான வழிகளில் தமிழர்களது வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து பறித்துவரும் வடமாநிலத்தவர்களின் மேலாதிக்கத்தைத் தடுக்கத்தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் திராவிட அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத மின்மிகு நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், உள்ளிட்ட பல்வேறு இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் 95 விழுக்காட்டிற்கு மேல் வடவர்களால் நிரப்பப்பட்டுப் பல்லாண்டு காலமாகவே தமிழர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு வருகிறது. இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் வட மாநிலத்தவர்கள் என்பதால் இந்தி பேசும் மாநிலத்தவரை வேலையில் அமர்த்தும் பணியை மறைமுகமாகச் செய்கின்றனர் என்பதே எதார்த்த உண்மையாக உள்ளது.

குறிப்பாக நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அமைய நிலம் கொடுத்த சுற்றியுள்ள 22 கிராமங்களைச் சேர்ந்த பூர்வக்குடி தமிழர்கள் இன்றளவும் கொடுத்த நிலத்திற்கு உரிய இழப்பீடோ, நிரந்தரப் பணி வாய்ப்போ கிடைக்காமல் வருடக்கணக்காக அலைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பணி பாதுகாப்போ, விபத்து காப்பீடோ, ஊக்கத்தொகையோ எதுவுமின்றிப் வெறும் ஒப்பந்த தொழிலாளர்களாகக் கொத்தடிமைகள் போல் பணிபுரிந்து வரும் நிலையில், நெய்வேலி நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட உயர் பதவிகள் அனைத்தும் வட மாநிலத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்குப் பணிபயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்கள் வேலை தரவேண்டி வீதியில் இறங்கிப் போராடி வரும் நிலையில் காலியாக இருந்த 259 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியர்) பணிக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்த 1582 பேரில் ஒரு விழுக்காட்டினர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதுதான் பெருங்கொடுமை.

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் தொழில் பழகுநர் இடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 1,765 பேரில் 1,600 பேர் வடவர்களாவர். குறிப்பாகக் கடந்த 2020 ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் திருச்சி பொன்மலை தொடர்வண்டி பணி மனையில் 581 பணி இடங்கள் நிரப்பப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்த 12 பேரைத் தவிர முழுக்க முழுக்க வடமாநிலத்தவர் மட்டுமே பணிநியமனம் செய்யப்பட்ட நிலையில், பலத்த எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே போன்று 2012ம் ஆண்டுச் சென்னை ரயில்வே மண்டலத்தில் 884 காலிப்பணியிடங்களை நிரப்பியபோது தமிழகத்தைச் சேர்ந்த 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

2013ம் ஆண்டு ரயில்வே குரூப்-டி பணிக்காக 2,362 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் 74 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமின்றி சென்னை, சேலம், திருச்சி, மதுரை என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடர்வண்டி கோட்டங்களில் வடவர்களே நிரம்பியுள்ளனர்.

2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தால் (BHEL) பணியமர்த்தப்பட்ட138 பொறியாளர்களில் ஒருவர்கூடத் தமிழர் இல்லை. 2008ம் ஆண்டு நிரப்பப்பட்ட 77 செயற்பொறியாளர் பணியிடங்களில் 17 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ஆவடி கனரக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் நிரப்பப்பட்ட 100 சார்ஜ்மென் பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 15 பேருக்கும், 2011ம் ஆண்டு நிரப்பப்பட்ட 108 பயிற்சியாளர் பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 15 பேருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது இப்படித் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் ஒவ்வொன்றாக கணக்கிட்டால் இதைவிடவும் மிகமிகச் சொற்ப அளவில் மட்டுமே தமிழர்களுக்கான பணிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்த பொதுத்துறை நிறுவனங்களில் நிலவிய வடவர்களின் ஆதிக்கம், அதற்கடுத்து ஒன்றிய அரசின் நிர்வாகத்துறையிலும் முறைகேடாகப் பணிவாய்ப்பினை பெறுமளவுக்கு விரிவடைந்துள்ளது. 2008ம் ஆண்டுச் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் 200 உதவியாளர்கள் பணியிடம் நிரப்பப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கும், 2014ம் ஆண்டு 78 பணியிடங்கள் நிரப்பப்பட்டபோது 3 பேருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. அதே போன்று 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழே தெரியாத ஹரியான மாநிலத்தவர்கள் தமிழில் 25க்கு 24 என அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழகத்து அஞ்சலகங்களில் பணிவாய்ப்பினை பெற்றனர்.

இவையெல்லாம் திறமையின் அடிப்படையில் பணி வாய்ப்பினை பெற்றனர் என்பதுதான் இதுவரை ஏற்க முடியாததாக இருந்தது. ஏனேனில் சொந்த மாநிலத்தில் தாய்மொழி இந்தியில் தேர்வெழுதி வெல்ல முடியாது தோற்றவர்கள், தமிழில் அதிக மதிப்பெண் பெற்று தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு பெறுவது எப்படி? என்ற நெடுநாள் கேள்விக்கு தற்போது பிடிபட்டுள்ள 300 பேரின் போலிச்சான்றிதழ் சாட்சியம் கூறுகிறது. 

அதிகாரப்பூர்வமாகக் கண்ணெதிரே நடக்கும் இத்தகைய முறைகேடுகள் குறித்து அறிந்திருந்தும் பணிவாய்ப்பினை பறிகொடுத்த தமிழக இளைஞர்கள் எதுவும் செய்ய முடியாமல் கையறு நிலையில் நிற்கும் அவல நிலைதான் வேதனையின் உச்சம். தற்போது பிடிபட்டுள்ள 300 பேரால் பெரிய முறைகேடுகளின் சிறு பகுதி வெளிவந்துள்ளது. இன்னும் பிடிபடாத எத்தனை ஆயிரம் பேர் இவ்வாறு போலிச்சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்துள்ளனர்? எத்தனை ஆண்டுகளாக இந்த முறைகேடுகள் நடந்தேறுகிறது? அவற்றையெல்லாம் யார் சோதனை செய்து உறுதிப்படுத்துவது?

அதுமட்டுமின்றி , ஏதேனும் ஒரு காரணம் காட்டி தமிழ்நாட்டுத் தேர்வர்களைப் போட்டியிலிருந்து விலகச்செய்வதும், வட மாநிலத்தவருக்குச் சலுகைகள் அளித்து வெல்லச் செய்வதும் தமிழக மாணவர்கள் தோல்வியுற்று வெளியேற மற்றுமொரு முக்கியக் காரணமாகும்.

கடந்த 2014ம் ஆண்டுப் பெரம்பூர் ஐசிஎப் நிறுவனத்தில் 5,550 பணியிடங்களுக்கு ஆள் சேர்த்த போது பிற மாநில மாணவர்களின் சான்றிதழ்களில் அரசு அதிகாரி கையொப்பம் இல்லாமலேயே இணையம் வாயிலாக ஏற்றுக்கொண்டதும், தமிழக மாணவர்களுக்கு மட்டும் அரசு அதிகாரி கையொப்பம் கட்டாயம் எனக்கூறி 2 லட்சத்து 27 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிகழ்வும், 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அஞ்சலகப் பணியிடங்களில் மாநில மொழிகளில் வினாத்தாள்கள் வழங்கப்படுவதை நிறுத்தி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிகழ்வும் தமிழர்களை வஞ்சித்து வெளியேற்றி வடவர்களை அதிகரிப்பதற்கான தொடர் நிகழ்ச்சி நிரல்கள் என்பதைக் காட்டுகிறது. 

இந்தி திணிப்பினை கடுமையாக எதிர்க்கும் தமிழ்நாட்டில் இந்திக்காரர்களைத் திணிக்கும் மறைமுகச் சூழ்ச்சியும், இத்தகைய முறைகேடான பணியமர்த்தல்களின் பின்புலத்தில் உள்ளதென்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. மெல்ல மெல்லத் தமிழர்களின் விழுக்காட்டைக் குறைப்பதன் மூலம் தமிழர்கள் தங்களது அரசியல் அதிகாரத்தை இழக்கும் பேராபத்தும் விரைவில் ஏற்படக்கூடும். அதோடு குற்றச்செயல்களும் நாளுக்குநாள் பெருகி தமிழ்நாடு மெல்ல மெல்ல வாழத்தகுதியற்ற நிலமாகவும் மாற்றப்படுகிறது.

இந்தியக் குடிமையியல் பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்குத் தேர்வாகும் தமிழர்களின் எண்ணிக்கை ஐம்பதாண்டுகாலத் திராவிட ஆட்சிக்காலத்தில் பெருமளவு குறைந்து வரும் நிலையில் நீட் தேர்வு மூலம் தமிழக மருத்துவக் கல்வியிடங்கள் வட மாநிலத்தவருக்குக் காவுகொடுக்கப்பட்டது. 

அதற்கு நேர்மாறாக வடமாநிலங்களுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்கள் அடுத்தடுத்து சந்தேகத்திற்குரிய வகையில் வடமாநிலத்தவரால் கொல்லப்படும் கொடும் நிகழ்வுகளும் அரங்கேறியது. 

ஒன்றிய அரசு நிறுவனங்கள் மற்றும் நிர்வாகப் பணியிடங்களிலிருந்த வடவர்கள் ஆதிக்கம் அடுத்தகட்டமாக தமிழ்நாடு மாநில அரசின் வேலை வாய்ப்புகளிலும் உள்நுழைந்துள்ளதுதான் அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சியாகும்.

கடந்த 2017ம் ஆண்டு அரசு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டபோது மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிறமாநிலத்தவருக்கும் வாய்ப்பு வழங்கியதில் 1068 பணியிடங்களில் 68 விழுக்காடு அளவிற்கு பிற மாநிலத்தவருக்குச் சென்றதும், அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்திய பிறகு அத்தேர்வு ரத்து செய்யப்பட்டதும் கடந்தகால வரலாறு. 

மற்றுமொரு நிகழ்வாக கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரியத்தால் 300 உதவிப் பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில் 39 பேர் பிற மாநிலத்தவர்கள். தமிழர்களின் பணிவாய்ப்பினை பறித்து தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியில் சேர்ந்த தமிழே தெரியாத அவர்களுக்கு, மூன்றாண்டுகளுக்குள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு அரசு தாராளச் சலுகை காட்டிய அவலமும் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்றதுதான் கொடுமையின் உச்சமாகும்.

தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் பணிக்குச் சேர்பவர்கள் தமிழ்மொழி பாடத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று அரசு உத்தரவிருக்கிறது. ஆனால் இவ்விதி முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பது முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் வங்க மொழியில், பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்கள் மட்டுமே அம்மாநில அரசுப் பணியில் சேர முடியும் என்ற சட்டம் உள்ளதோடு, குழு அமைக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.

இந்திய ஒன்றிய அரசின் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியிடங்கள் என்று பல்கிப் பெருகிய வடவர்கள் ஆதிக்கம் தனியார் பெருநிறுவனங்களிலும் தொடர்வதோடு நிற்காமல், தமிழ்நாட்டிலுள்ள கட்டிட பணிகள், அனைத்து விதமான கடைகள், சிறுகுறு தொழிற்சாலைகள் என அனைத்திலும் குறைந்த ஊதியத்திற்கு உடலுழைப்புப் பணிகளுக்குச் சேர்ந்துள்ளவர்களால், தமிழர்களின் பணிவாய்ப்பு அடியோடு பறிபோவதோடு, தமிழர்கள் போராடிப்பெற்ற குறைந்தபட்ச அடிப்படை ஊதிய உத்தரவாதத்தையும் பல ஆண்டுகள் பின்னுக்குத்தள்ளி இல்லாதொழிக்கின்றனர். 

ஏற்கனவே தமிழ்நாட்டில், தமிழர்களின் அரசியல் அதிகாரம், வணிகம், பொருளாதாரம் பெருமளவு தமிழர் அல்லாதவர்களே கைப்பற்றியுள்ள நிலையில், அனைத்து விதமான வேலை வாய்ப்புகளையும் வடவர்களிடம் பறிகொடுத்தால் தமிழர்கள் சொந்த மண்ணிலேயே அதிகாரமற்ற ஏதிலிகளாகவும், நிலமற்ற கூலிகளாகவும் மாற்றப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. 

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரகண்ட், மிசோரம், சிக்கிம், மணிப்பூர், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தனிச்சட்டமே இயற்றியுள்ளன. அதுபோன்று தனியார்த் துறைகளில் 80 விழுக்காடு அளவுக்கு மண்ணின் மைந்தர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்க வேண்டுமென்று கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகள் சட்டமியற்றியுள்ளன.

ஆகவே, திமுக அரசு இனியாவது விழித்துக்கொண்டு தமிழர்களது பணிவாய்ப்புகள் வடவர்களிடம் பறிபோவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என்று நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தனிச்சட்டம் நிறைவேற்றி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் ஒருகோடி தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், போலிச்சான்றிதழ் கொடுத்து ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்த 300 வடமாநிலத்தவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், நிகழ்ந்துள்ள இம்முறைகேடு குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு முறைகேட்டில் தொடர்புடைய அனைவருக்கும் சட்டத்தின் மூலம் உரிய தண்டனைக் கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman statement on TN jobs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->