பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கம்.!
special bus and train run in tamilnadu for pournami girivalam
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் நடைபெறுவது வழக்கம். இந்தக் கிரிவலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொள்வார்கள். அப்படிக் கலந்துக் கொள்ளும் பக்தர்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த மாதம் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று 350 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-

"பவுர்ணமி கிரிவலத்தையொட்டி சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று 350 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வார இறுதிநாள் விடுமுறையின் காரணமாக, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14, 15-ம் தேதிகளில் 545 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 51 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும் என்று மொத்தம் 616 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதைத் தொடர்ந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கிரிவலத்திற்காக தெற்கு ரெயில்வே சார்பிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- "பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி, விழுப்புரத்தில் இருந்து இன்று காலை 9.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில், காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதே தேதியில், திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
special bus and train run in tamilnadu for pournami girivalam