இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் உள்ள யானைகளை முறையாக பராமரிக்க பாகன்களுக்கு அறுவுறுத்தல் - Seithipunal
Seithipunal


இந்து சமய அறநிலையத்துறை கோவில்களின் கட்டுப்பாட்டில் வளர்க்கப்படும் யானைகளை சிறப்பாக பராமரிக்க யானை பாகன்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்கள் மற்றும் திருமடங்களில் 31 யானைகள் பராமரிக்கப்படுகின்றன என்றும், இவை இயற்கையான சூழலில் மண் தரையில் கட்டி வைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் யானைகளுக்கு உணவாக அதன் மொத்த எடையில் 5 விழுக்காடு அளவிற்கு, பனை ஓலை மற்றும் பச்சைப் புல் தினமும் வழங்கப்பட்டு வருகிறது. பனை ஓலைக்கு பதிலாக தென்னை ஓலை அல்லது சோளம் வழங்கப்பட்டு வருகிறது. வளரும் யானைகள் மற்றும் பலவீனமான யானைகளுக்கு கூடுதலாக 50 கிலோ அளவில் பனை ஓலை மற்றும் பச்சைப்புல் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் யானைகள் அன்புடன் நடத்தப்பட வேண்டும் எனவும், யானைகளின் வாலை பிடித்து இழுப்பது போன்ற செயல்களை கண்டிப்பாக செய்யக்கூடாது, யானைகள் இயற்கையாக பராமரிக்கப்பட வேண்டும், அவற்றின் மீது உள்ள முடிகளை அகற்றுவது போன்ற இயற்கைக்கு மாறான செயல்களை செய்ய ஒருபோதும் அனுமதி இல்லை என்றும் இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. 

கோவில்களில் நடைபெறும் பூஜை மற்றும் திருவிழாக்களை தவிர பிற எந்த காரியங்களுக்கும் யானைகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது எனவும் கோவில் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் யானைகளுக்கு பக்தர்கள் தங்கள் விருப்பம் போல் உணவு பொருட்கள் வழங்க அனுமதிக்க கூடாது என்றும், யானைகளை பராமரிக்க நன்கொடை வழங்க பக்தர்கள் முடிவு செய்தால் அதை உண்டியலில் செலுத்தும்படி அவர்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. யானைகளுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நோய்வாய்ப்பட்டு இருந்தாலோ, அல்லது நோய் அறிகுறி கண்டறியப்பட்டாலோ உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் கோவில் வளாகத்திலும், யானைகளின் அருகிலும் அனுமதிக்கக்கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகளையோ அல்லது யானைகளுடன் நின்றோ புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளுக்கு கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது என்றும், யானைகளின் அருகில் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வாணவேடிக்கைகள், மிகுந்த ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துமிடங்கள், அதிக சப்தத்தை உண்டாக்கும் இடங்கள் ஆகிய பகுதிகளுக்கு யானைகளை அழைத்துச் செல்லக் கூடாது என்றும் பாகன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை திருக்கோவில் நிர்வாகம் மற்றும் யானை பாகன்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Temple elephants maintenance order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->