காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து பெண் பலி - தலைமைக் காவலர் உள்பட 3 பேர் பணியிடமாற்றம்.!
three police officers transfer for women died front of police station in thanjavur
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை அடுத்த நடுக்காவேரி அரச மர தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் அய்யா தினேஷ். இவரை பொது இடத்தில் கத்தியைக்காட்டி மிரட்டியதாக கூறி போலீசார் கடந்த 8-ந்தேதி கைது செய்தனர்.
இதனால் மனமுடைந்த தினேஷின் தங்கைகளான மேனகா, கீர்த்திகா உள்ளிட்டோர் தனது அண்ணன் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்ததாகவும், தனது அண்ணனை விடுவிக்குமாறும் கூறி காவல் நிலையம் முன்பு காத்திருந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி இருவரும் களைக்கொல்லி மருந்தை குடித்தனர்.

உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார். மேனகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
காவல் நிலையம் முன்பு பெண்கள் விஷம் குடித்த விவகாரத்தை முறையாக கையாளாமல் விட்டதாக நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு பொறுப்பு வகிக்கும் திருவையாறு காவல் ஆய்வாளர் சர்மிளா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடுக்காவேரி காவல்நிலைய தலைமைக் காவலர் மணிமேகலை, உதவி காவல் ஆய்வாளர்கள் அறிவழகன், கலியபெருமாள் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
three police officers transfer for women died front of police station in thanjavur