அரசு கல்லூரிகளுக்கு 152 கோடி நிதி ஒதுக்கீடு - உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்.!
tn govt allocate 152 crores fund to govt colleges minister info
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 2024-2025ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;-
தமிழகத்தில் அரசு கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2024-2025ம் ஆண்டிற்கு 31 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 6 அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு தேவையான ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.152,96,83,000/- நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன் படி சென்னை, கோவை, திருப்பூர், தருமபுரி, நீலகிரி, சேலம், அரியலூர், முசிறி, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர் ஆகிய பகுதியிலுள்ள அரசு கலைக் கல்லூரிகளிலும், கோவை தொண்டாமுத்தூர், நீலகிரி, கூடலூர், குமாரபாளையம், வேடசந்தூர், வீரபாண்டி, கடலாடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி, நாகர்கோவில், புதுக்கோட்டை, திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், சேலம், கொடைக்கானல், சிவகங்கை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிகளிலும் தேவையான ஆய்வகங்கள், வகுப்பறைகள், மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு ரூ. 100.15 கோடி நிதி அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வேலூர், திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் சென்னை மண்டலங்களிலுள்ள 12 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 6 அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு தேவையான ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.52.8183 கோடி நிதி தமிழ்நாடு அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
tn govt allocate 152 crores fund to govt colleges minister info