கள்ளச்சாராயம் அல்ல அது விஷச்சாராயம் | டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கம்! - Seithipunal
Seithipunal


மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் இல்லை என்றும், அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் (ஸ்பிரிட்) என்று காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருக்கரணை கிராமம் மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வறிக்கையில் இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல என்பதும், ஆலைகளில் பயன்படுத்தப்படும், மெத்தனால் என்ற விஷச்சாராயம் என்பதும் தெரியவந்தது.

இந்த மெத்தனால் என்ற விஷச்சாராயம் ஓதியூரைச் சேர்ந்த சாராய வியாபாரி அமரன் என்பவர் விற்பனை செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்ததில், அவர் முத்து என்பவரிடமிருந்து வாங்கியுள்ளதாகவும், முத்து பாண்டிச்சேரி எழுமலை என்பவரிடமிருந்து வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதுபோல சித்தாமூர், பெருக்காணை மற்றும் பேரம்பாக்கத்தில் விஷச்சாராய விற்பனை செய்த 'அமாவாசை' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மது அருந்தியதால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இவர் ஓதியுர் வேலு, அவர் தம்பி சந்திரன் என்பவரிடமிருந்து வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். வேலு என்பவர் 'பனையூர் ராஜேஷ் என்பவரிடமிருந்து வாங்கியதாக கூறியுள்ளார். இவர் மேற்படி விஷச்சாராயத்தை விளம்பூர் 'விஜி என்பவரிடமிருந்து வாங்கியதாகத் தெரிவித்தார். விளம்பூர் விஜி விஷச்சாராயத்தை பாண்டிச்சேரி ஏழுமலையிடமிருந்து வாங்கியுள்ளார். ஆக சித்தாமூரில் விற்கப்பட்ட விஷச்சாராயமும், மரக்காணத்தில் விற்கப்பட்ட விஷச்சாராயமும் ஓரிடத்திலிருந்து வந்தது என புலனாகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 1,40,649 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,39,697 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 37,217 லிட்டர் விஷச்சாராயம் கைப்பற்றப்பட்டு, 2957 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த 2023ஆம் ஆண்டு மட்டும் இதுவரையிலும் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 55,173 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, இதுவரையிலும் 255,078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 1,077 மோட்டார் வாகனங்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கள்ளச் சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டதாலும், அண்டை மாநிலங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படுவதாலும், சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில், தொழிற்சாலையிலிருந்து, விஷச்சாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளனர். அதனால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்தத் தொழிற்சாலையிலிருந்த மெத்தனால் என்ற விஷச்சாராயம் வந்தது, அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று புலன் விசாரணை நடந்து வருகிறது" என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Police report Marakanam and sithamur Liquor Death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->