‘மாணவர் மனசு’ தமிழக பள்ளிகளில் கட்டாயம் - தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உத்தரவு!
TN School Manavar Manasu Complaint Box
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 'மாணவர் மனசு' என்ற புகார் பெட்டியை வைக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் எஸ். குமாரி தலைமை வகித்து பேசியதாவது, அனைத்து பள்ளிகளிலும் 'மாணவர் மனசு' என்ற புகார் பெட்டியை வைக்க வேண்டும்.
இந்த புகார் பெட்டிக்கு வரும் மாணவர்களின் கடிதங்களை, பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் முன்னிலையில் திறந்து, கடிதத்தில் கூறப்பட்ட புகார்களை, மாணவர்களின் குறைகளை கண்டறிந்து அதனை தீர்க்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் மாணவர்களின் இடைநிற்றல் குறித்து கண்டறியவும், அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க தேவையான உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் விரிவாக புரிய வைக்க வேண்டும். மேலும் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவிகளுக்கு சரியான ஆலோசனையையும், பயிற்சியையும் ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.
மலைப்பகுதியில் வாழும் மாணவ, மாணவிகள் கல்வி கற்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதே போல் பள்ளி மாணவ, மாணவர்களிடையே இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
English Summary
TN School Manavar Manasu Complaint Box