சென்னையில் பேருந்துகள் இயக்கப்படுமா? - பீதியில் பயணிகள்.!
transport employees strike tamilnadu
தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9-ந் தேதியான இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக பேருந்து ஊழியர்கள் அறிவித்து இருந்தனர்.
இது குறித்து பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அதில் தீர்வு காணப்படததால், நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் தொழிலாளர் நல இணை கமிஷனர் எல்.ரமேஷ் தலைமையில் பகல் 1 மணி அளவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில், எந்த உடன்பாடும் ஏற்படாததால் அதுவும் தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று முதல் திட்டமிட்ட படி வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாகவும், சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் 15 ஆயிரம் பேருந்துகள் ஓடாது என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தற்போது வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் தொ.மு.ச மற்றும் ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதால் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சென்னை மாநகரில் பல்லவன் இல்லம், வடபழனி, அடையாறு உள்ளிட்ட முக்கிய பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து பேருந்து நிலையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதற்கிடையே, சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் சார்பில் அனைத்து பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
English Summary
transport employees strike tamilnadu