சிறு வணிகர்கள் மீது மத்திய அரசு நடத்திய கொடூரத் தாக்குதல் இது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!
CPIM Condemn to Central Govt GST
கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்து, சிறு வணிகர்கள் மீது மத்திய அரசு கொடூரத் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள் கடை வாடகை தொகையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 23-ல் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிக மோசடியானது மட்டுமின்றி, வாடகை இடத்தில் வாணிபம் செய்யும் ஏழை, நடுத்தர வணிகர்கள் மீது தொடுத்துள்ள மோசமான தாக்குதலாகும்.
ஏற்கெனவே கடுமையாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறு வணிகர்களை மேலும் மோசமான நிலைக்கு தள்ளிவிடுகிற ஆபத்தை கொண்டதாகும்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது சிறு வணிகர்களை முற்றாக சீரழித்து, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு வணிகர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூரத் தாக்குதலாகும்.
எனவே, மத்திய பாஜக அரசின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக திரும்ப பெற வேண்டும்” என்று கே பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
CPIM Condemn to Central Govt GST