காவிரி தண்ணீர் விவகாரம்: திருச்சியில் பரபரப்பை கிளப்பிய 300 பேர் கைது!
Trichy Cauvery water issue protesting 300 people arrested
திருச்சியில் காவிரி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என இன்று போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு மாதவாரியாக கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வேண்டும் என்றும் கர்நாடகத்தில் மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வரும் பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்தும் இன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் கூட்டமைப்பினர் முடிவு செய்தனர்.
அதன்படி இன்று திருச்சியில் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசை கண்டித்து காவிரி படுக்கை பாதுகாப்பு கூட்டியக்கம் மற்றும் தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் தி.மு.க மற்றும் நிர்வாகிகள், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தமிழகத்துக்கு கர்நாடகா அரசு, உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்த மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் டெல்டா மாவட்டங்களில் 20 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
Trichy Cauvery water issue protesting 300 people arrested