மெரினா புரட்சிக்கு மாபெரும் நினைவுச் சின்னம் வேண்டும்..! முதல்வருக்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கோரிக்கை.!!
TRP Raja requests to set memorial for Jallikattu protests
தமிழர் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உடைக்க அறவழியில் லட்சக்கணக்கான மாணவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் அணி திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த மாபெரும் மக்கள் எழுச்சியாக உருமாறி தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக அளவில் ஜல்லிக்கட்டு போராட்டம் பேசப்பட்ட நிலையில் மெரினா புரட்சி என்றே அழைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்போதைய அதிமுக அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு சட்டத்தை இயற்றியது. இதற்கு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியதால் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் நல அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டதில் நீண்ட வருடங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்திய இந்த வழக்கில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என தீர்ப்பு வழங்கியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஜல்லிக்கட்டு போராட வெற்றியின் நினைவாக மெரினா கடற்கரையில் மாபெரும் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழர் உரிமைகளின் காவலராகத் திகழும் நம் #திராவிட_நாயகன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தடையின்றி நடைபெற வலியுறுத்தி மதுரை அலங்காநல்லூரில் 2017 ஜனவரி 3ஆம் நாள் அறப்போராட்டக் களம் கண்டவர். அதனைத் தொடர்ந்து ஜனவரி 17 அன்று மெரினாவில் தமிழர்களின் தன்னெழுச்சியானப் போராட்டம் வீறு கொண்டது. மாணவர்களும் மக்களும் அன்று ஒருங்கிணைந்து நடத்திய போராட்டம் தமிழ்நாடு முழுவதும் எழுச்சி அலையை உண்டாக்கி, இன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாக இறுதி வெற்றியைப் பெற்றுள்ளது !
சட்டப்போரில் தமிழ்நாடு அரசின் வாதங்கள் இந்த வெற்றியை முழுமையாக்கின. அந்த போராட்டத்தில் உணர்வுப்பூர்வமாக கலந்துகொண்ட லட்சக்கணக்கானோரில் ஒருவன் என்ற முறையிலும், ஜல்லிக்கட்டு காளைகளை மிகவும் நேசிப்பவன் என்ற முறையிலும், மக்களின் உணர்வுகளோடு ஒருங்கிணைந்து பண்பாட்டை மீட்டெடுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஜல்லிக்கட்டுப் போராட்ட வெற்றியின் அடையாளமாக மெரினா கடற்கரையில் மாபெரும் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்திட வேண்டுகிறேன்" என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
TRP Raja requests to set memorial for Jallikattu protests