மன்னிப்பு கோரிய திருமாவளவன்! என்னையும் அறியாமல் தவறுதலாக நா தவறி...!
VCK Thirumavalavan Apology For Physically challenged
மாற்று திறனாளிகளுக்கு திருமணமே ஆகாது என்று, அசிங்கப்படுத்தி பேசியதற்காக விசிக தலைவர் திருமாவளவன் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்தி குறிப்பில், "கடந்த ஜூன்-30 அன்று மேலவளவில் நடந்த "மேலவளவுப் போராளிகளின் வீரவணக்க நினைவேந்தல்" நிகழ்வில் உரையாற்றும் போது மாற்றுத் திறனாளிகள் மனம்நோகும் வகையில் ஓரிரு சொற்கள் தவறி விழுந்துவிட்டன. அப்போதே அதற்கு எனது வருத்தத்தையும் தெரிவித்தேன்.
மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
நான் ஒருபோதும் மாற்றுத்திறனாளிகளைக் காயப்படுத்தும் உள்நோக்கமோ, அவர்களைப்பற்றி இளக்காரமான மதிப்பீடோ கொண்டவனுமில்லை. இதனை மாற்றுத் திறனாளிகளுக்கான இயக்கத்தை நடத்தும் முன்னணி பொறுப்பாளர்கள் பலரும் அறிவர்.
என்னைப்பற்றி தனிப்பட்டமுறையில் அவதூறுபரப்பும் ஒருசில அற்பர்களைக் கண்டிக்கும் வகையில் நான் ஆதங்கப்பட்டு எனது உரையின் போக்கிலேயே தன்னிலை விளக்கம் அளித்தேன். அப்போது அச்சொற்கள் என்னையும் அறியாமல் தவறுதலாக நா தவறி வந்து விழுந்தன. அதற்காக உடனே எனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினேன்.
இனி அவ்வாறு நிகழாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன். வருந்துகிறேன். மாற்றுத்திறனாளிகள் தோழர்கள் பொறுத்தருளவும்" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
English Summary
VCK Thirumavalavan Apology For Physically challenged