ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தாதது ஏன்? அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
Why not increase the pensioners gratuity High Court orders to submit a report
உயர்நீதிமன்றத்தின் பழைய உத்தரவை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசு!
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு அரசு ஊழியர்களுக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் நான்கு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஆனால் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு "86,000 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 20000 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.
பணியில் உள்ளவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் நிலையில் எங்களுக்கு மட்டும் வழங்க மறுக்கப்படுவது பாரபட்சமான செயல். கடந்த ஜூலை மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 31 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்த்தப்பட்டு விட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணம் காட்டி எங்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை" என்ற கோரிக்கை அரசு போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் சார்பாக முன்வைக்கப்பட்டது.
அரசு சார்பில் "நிதி நெருக்கடியின் காரணமாக போக்குவரத்து துறை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க அரசிடம் போதிய நிதி இல்லை. மற்ற துறைகளில் போதுமான நிதி இருக்கிறது. குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்கள் உள்ளனர். போக்குவரத்து துறையில் அதிக அளவில் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளதால் அகவிலைப்படி வழங்க அரசுக்கு 81 கோடி ரூபாய் செலவாகும்" என்ன வாதம் முன்வைக்கப்பட்டது.
அரசு தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி " அரசு போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு சேர வேண்டிய பலன்களை வழங்க வேண்டும். இது குறித்து கேள்வி எழுப்பும்போதெல்லாம் நிதி நெருக்கடி என்ற பதிலையே தமிழக அரசு சொல்கிறது. நிதி நெருக்கடியை காரணமாக கூறும் அரசு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது எப்படி? என நீதிபதி கேள்வி எழுப்பி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
எனவே அரசு போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வரும் நவம்பர் முதல் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். மேலும் இது குறித்தான அறிக்கையை நவம்பர் 25ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் உத்தரவிட்டுள்ளார்
English Summary
Why not increase the pensioners gratuity High Court orders to submit a report