தம்பதியினருக்கு இடையே தகராறு - ரெயிலில் இருந்து குதித்து இளம்பெண் பலி.!!
women fell down from train in karoor
கரூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்துப்பாளையம் ஜாமீயா நகரைச் சேர்ந்தவர்கள் ஜேகபூர்-அஜினாபேகம். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், அஜினா பேகம் திருச்சியில் வசிக்கும் தனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாதால், அவரை பார்க்க வேண்டும் என்று தன் கணவரிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, தம்பதி இருவரும் நேற்று காலை கரூரில் இருந்து ரெயில் மூலம் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றனர். அப்படிச் சென்று கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அஜினா பேகம் திடீரென ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஜேகபூர் பயணிகளுடன் சேர்ந்து ரயிலை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தனது மனைவியை தேடிச் சென்றார். அங்கு ஒரு ஓரத்தில் தலையில் பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்த மனைவி அஜினாபேகத்தை மீட்டு, அப்பகுதி மக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அஜினா பேகத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சி ரயில்வே போலீஸார் அங்கு சென்று, அஜினாபேகத்தின் உடலை மீட்டு, பிரேத பிரசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அஜினாபேகத்தின் தாயார் மும்தாஜ் பேகம் அளித்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அஜினா பேகத்தின் உயிரிழப்பு கொலையா?, தற்கொலையா? என்று விசாரித்து வருகின்றனர்.
English Summary
women fell down from train in karoor