கடனைத் திருப்பிக் கேட்ட ஆத்திரம் - நண்பரை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர் கைது.!
youth arrested for kill friend in chennai perumpakkam
சென்னை பெரும்பாக்கத்தில் எழில் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கார்த்திக். சென்டரிங் வேலை செய்து வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர் ராஜேஷ் என்பவருக்கு 1000 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாகியும் ராஜேஷ் கடனைத் திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு ராஜேஷ் தனது நண்பர் தினேஷ் என்பவருடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த கார்த்திக் ராஜேஷிடம் தான் கடனாக கொடுத்த 1000 ரூபாய் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ் என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த கார்த்திக் ராஜேஷை அடித்துள்ளார். அப்போது உடன் இருந்த ராஜேஷின் நண்பர் தினேஷ் இருவரையும் சமாதானம் அனுப்பி வைத்தார்.
ஆனால், கார்த்திக் சிறிது நேரத்திற்கு பிறகு ராஜேஷ் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டி பணத்தைக் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து கார்த்திக்கை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து பதறிபோன ராஜேஷ்தனது நண்பர் தினேஷ் உதவியுடன் கார்த்திக்கை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கார்த்திக் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ், கார்த்திக் உடலுடன் காவல் நிலையத்திற்கு சென்று சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார், கார்த்திக் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ராஜேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth arrested for kill friend in chennai perumpakkam