மயிலாடுதுறையில் கொடூரம் - தீக்குளித்த காதலியை காப்பாற்ற முயன்ற காதலன் உயிரிழப்பு.!
youth died in mayiladuthurai
மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ். இவர், பூம்புகார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இதேபோல், கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா என்பவர், மயிலாடுதுறை அரசு ஞானாம்பிகை மகளிர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு சில நாட்களுக்குப் பிறகு அது காதலாக மாறியது. இதற்கிடையே ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகியதால் சிந்துஜாவிடம் பேசுவது மற்றும் சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த சிந்துஜா பூம்புகாரில் காதலனை சந்தித்து பேசினர். பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறைக்கு வந்தனர்.
அப்போது அவர்கள் காவிரி பாலக்கரை என்ற இடத்தில் வந்தபோது சிந்துஜா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதைப்பார்த்து பதறிப்போன ஆகாஷ், சிந்துஜாவை காப்பாற்ற முயன்ற போது அந்த தீ இருவர் மீதும் பற்றி எரிந்தது. உடனே அங்கிருந்தவர்கள் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆகாஷ், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சிந்துஜா தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சிந்துஜாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆகாஷ் தனது மரண வாக்குமூலத்தில் கொடுத்த தகவலின்படி மயிலாடுதுறை போலீசார், சிந்துஜா மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீக்குளித்த காதலியை காப்பாற்ற முயன்ற காதலன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth died in mayiladuthurai